மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
04-Oct-2025
ஆண் பிள்ளைகள் மட்டுமே, தாய், தந்தையை பார்த்து கொள்வர். கடைசி காலத்தில் உதவியாக இருப்பர் என்ற காலம் ஒன்றிருந்தது. பெண் பிள்ளைகளை பெற்றால், அதிகமாக செலவு வைப்பர் என, நினைத்தனர். இதே காரணத்தால் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெண்களுக்கும் சம உரிமை கிடைத்துள்ளது. பெண்களும் தங்களின் பெற்றோரை பார்த்து கொள்கின்றனர். ஹாவேரியில் ஒரு பெண் படிப்பை நிறுத்தி விட்டு, தன் தந்தைக்கு உதவியாக மெக்கானிக்காக மாறியுள்ளார். ஹாவேரி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், பெளவடி கிராமத்தில் வசிப்பவர் உதய், 45. இவரது மனைவி பாரதி, 42. தம்பதிக்கு நான்கு மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகள் காவேரி, 19. கடைசி மகள் காஞ்சனா ஆறாம் வகுப்பு படிக்கிறார். உதய் கடந்த 30 ஆண்டுகளாக, பெளவடியில், 'ஜெய் ஸ்ரீராம் ஆட்டோ கேரேஜ்' என்ற பெயரில், கேரேஜ் நடத்தி வருகிறார். உதய் சிறுவனாக இருந்த போது, மரத்தில் இருந்து விழுந்ததில், கால் எலும்பு முறிந்தது. அவரால் அதிக சுமையை துாக்க முடியாது. கஷ்டப்பட்டு இரண்டு மகள்களுக்கு திருமணம் முடித்தார். இளைய மகள்களை படிக்க வைத்தார். தந்தை படும் கஷ்டத்தை கண்ட காவேரி, சிறுமியாக இருந்த போதே, ஆண் பிள்ளைகளை போன்று டி சர்ட், பேன்ட் அணிந்து, தந்தையின் கேரேஜுக்கு சென்று, கையில் ஸ்பேனர் பிடித்து பைக் ரிப்பேர் செய்வதில் ஈடுபட்டார். நாளடைவில் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டார். எந்த பைக்காக இருந்தாலும், ரிப்பேர் செய்கிறார். ஒன்றரை ஆண்டுக்கு முன், படிப்பை நிறுத்திய அவர், மெக்கானிக்காக தந்தைக்கு தோள் கொடுத்து நிற்கிறார். இவரை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். பொதுவாக மெக்கானிக் வேலைகளில், பெரும்பாலும் ஆண்களே இருப்பர். பெண் மெக்கானிக்குகளை பார்ப்பது அபூர்வம். ஆண் பிள்ளைகளே மெக்கானிக்காக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த காவேரி, திறமையான மெக்கானிக் என, பெயர் எடுத்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: பெளவடி வீரத்தில் சிறந்த அரசி மல்லம்மா பிறந்த மண். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும், போராட்ட குணம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற தன்மானம் இருக்கும். நான் அனைத்து விதமான பைக்குகளையும் ரிப்பேர் செய்கிறேன். பைக்கையும் ஓட்டுகிறேன். தினமும் காலை 9:30 மணி முதல், இரவு 10:00 மணி வரை பணியாற்றுகிறேன். தினமும் ஐந்து முதல் பத்து பைக்குகளை ரிப்பேர் செய்கிறேன். கேரேஜை பெரிதாக விரிவுபடுத்த வேண்டும் என்பது, என் கனவு. தந்தையே எனக்கு குரு. தந்தை வெளியே செல்லும் போது, நானே கேரேஜை பார்த்து கொள்கிறேன். கேரேஜுக்கு வரும் பலரும், என் பணியை கண்டு பெருமையாக பேசுகின்றனர். இருந்தால் இப்படிப்பட்ட மகள் இருக்க வேண்டும் என்கின்றனர். என் பெற்றோரும் கூட, 'நீ எங்களுக்கு மகள் அல்ல, மகன்' என கூறுகின்றனர். வீர ராணி மல்லம்மா பிறந்த மண்ணில் பிறந்தது, என் அதிர்ஷ்டம். அவர்தான் எனக்கு ஊக்கமளிக்கிறார். நான் மெக்கானிக்காக பணியாற்றுவதை பற்றி, சிலர் கிண்டல் செய்கின்றனர். அதை நான் பொருட்படுத்துவது இல்லை. வேலை தேடி அலையும் அவசியம் எனக்கு இல்லை. சொந்தமாக கேரேஜ் உள்ளது. என் காலில் நின்று, சம்பாதித்து தாய், தந்தையை நன்றாக பார்த்து கொள்வதே, என் விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார். காவேரியின் தந்தை உதய் கூறியதாவது: எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மூத்த மகள்களுக்கு திருமணம் செய்துள்ளேன். காவேரியும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அக்காக்களுக்கு திருமணம் ஆன பின், நானும் கேரேஜுக்கு வருகிறேன். பள்ளிக்கு செல்லமாட்டேன் என, கூறிவிட்டார். மகளை நான் கட்டாயப்படுத்தவில்லை. அவராகவே கேரேஜுக்கு வந்து, வேலையை கற்றுக்கொண்டார். இன்ஜின் ரிப்பேரில் சில நுணுக்கங்களை கற்க வேண்டும். எங்களுக்கு ஆண் மகன் இல்லை என்ற குறையை, காவேரி தீர்த்து வைத்துள்ளார். எங்கள் குடும்பத்தின் சக்தியே, என் மகள் காவேரிதான். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
04-Oct-2025