சமூக சேவையில் சாதிக்கும் பெண் எம்.பி.,
கர்நாடக தோட்டக்கலை அமைச்சராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவரது மனைவி பிரபா. இவர், தாவணகெரே தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆவார்.இவரை எம்.பி., என்று பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்காக நிறைய உதவிகளை செய்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலம் சுகாதார அட்டைகள் வினியோகம் செய்வது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் கிடைக்க செய்வது என பல உதவிகளை செய்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை செய்கிறார். ரத்த சோகை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், ஆஷா பணியாளர்களுக்கு உதவி செய்வது போன்ற பணிகளை முன்னின்று நடத்துகிறார். கொரோனா நேரத்தில் பிரபா நடத்தி வரும் அறக்கட்டளை சார்பில் 60,000 கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டது.சமூக பணிகள் செய்வது குறித்து பிரபா மல்லிகார்ஜுன் கூறியதாவது:நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். சிறுவயதில் இருந்து உன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று, பெற்றோர் என்னிடம் சொல்லி வளர்த்தனர். சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தின் மருமகள் ஆன பின், அவர் நடத்தி வரும் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்களை கவனிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். தற்போது எம்.பி., ஆக இருந்தாலும், சமூக பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு எனது குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர். வறுமையில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது மாவட்டத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை எனது குழுவின் மூலம் செய்து வருகிறேன். தற்போது எம்.பி., ஆக இருப்பது எனக்கு கூடுதல் பலமாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெண்களுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - -நமது நிருபர் --