பக்திக்கு வயதோ, முதுமையோ தடையாக இருக்காது. மன உறுதியும், அர்ப்பணிப்பு மனம் இருந்தால் போதும். இதற்கு சிவம்மா, சிறந்த உதாரணம். பாதயாத்திரை மூலமாகவே, பல கோவில்களை தரிசிக்கிறார். தற்போது பெங்களூரில் இருந்து நஞ்சன்கூடுக்கு பாதயாத்திரையாக சென்று, ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். சித்ரதுர்காவை சேர்ந்தவர் சிவம்மா, 75. இவர் கடவுள் மீது அபாரமான பக்தி கொண்டவர். இவர், 20 ஆண்டுகளாக, கர்நாடகாவின் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசித்துள்ளார். பஸ்சிலோ, ரயிலிலோ செல்வதில்லை. ஒவ்வொரு இடத்துக்கும் பாதயாத்திரையாகவே செல்கிறார். ஆண்டுதோறும் ஒரு தலத்தை தேர்வு செய்து, பாதயாத்திரை செய்வது அவரது வாழ்நாள் குறிக்கோளாகும். வயது, உடல் வலி, வானிலை மாற்றம் என, எதுவும் அவரது பக்திக்கு தடையாக இருந்தது இல்லை. சமீபத்தில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர், பாதயாத்திரையாக 180 கி.மீ., தொலைவில் உள்ள நஞ்சன்கூடை அடைந்தார். காலையில் கொளுத்தும் வெயில், அவ்வப்போது பெய்த மழை, கடுங்குளிர், பள்ளங்கள் நிறைந்த சாலைகளுக்கு அஞ்சாமல் நடந்தே சென்று ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசனம் செய்தார். வழி நெடுகிலும் உள்ள கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். பொதுமக்கள் சிவம்மாவுக்கு, உணவு, குடிநீர் கொடுத்து உதவினர். இவரது பக்தி மற்றும் மன உறுதியை கண்டு மக்கள் வியப்படைகின்றனர். சிவம்மா கூறியதாவது: சிவபெருமான் என் வாழ்க்கையின் ஆதாரம். என் உடலுக்கு வயதாகியுள்ளதே தவிர, மனம் இளமையாக உள்ளது. கடவுளின் அருளால், நஞ்சன்கூடு யாத்திரையை வெற்றிகரமாக முடித்தேன். என் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகன் காலமான பின், தீர்த்த யாத்திரை செல்ல துவங்கினேன். வாழ்க்கையில் கடவுளை காண்பது மட்டுமே, என் ஒரே குறிக்கோள். என்னால் ஈர்க்கப்பட்ட பலர், வருங்காலத்தில் பாதயாத்திரை சென்று, கடவுளை தரிசிப்பதாக கூறுகின்றனர். என் பக்திக்கு வயதோ, முதுமையோ இடையூறாக இல்லை. என் வாழ்நாள் முழுதும், பாதயாத்திரையாக செல்வேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -: