மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பள்ளி நடத்தும் பார்வையற்ற பெண்
அம்ருதவள்ளி கூறியதாவது: எனது சொந்த ஊர் சிக்கபல்லாபூரின் சிந்தாமணி. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கடந்த 1990 முதல் 1999 காலகட்டத்தில் பேராசிரியையாக பணியாற்றினேன். 2000க்கு பின், சிக்கபல்லாபூர் கிஷோர் வித்யா பவன் பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். அந்த நேரத்தில் கண் புரையால், வலது கண் பார்வையும் பறிபோனது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்த போது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளி துவங்கலாம் என்ற யோசனை தோன்றியது. சிரிப்பு கபடமற்றது கடந்த 2006ல் 'ஆதார்' என்ற பெயரில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை ஆரம்பித்தேன். பள்ளி துவங்கிய புதிதில், பெற்றோர் யாரும் தங்களது பிள்ளைகளை, பள்ளியில் கொண்டு வந்து சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வீடு வீடாக சென்று பெற்றோரிடம் நானும், என் பள்ளி ஆசிரியர்களும் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கருணை அதிகம். அவர்கள் சிரிக்கும் சிரிப்பு கள்ளம் கபடமற்றது. எங்கள் பள்ளியை அரசில் பதிவு செய்து இருந்தாலும், அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. உதவி கேட்டு நாங்களும், அரசிடம் கெஞ்சவில்லை. சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்கள், கிஷோர் வித்யா பவன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அளிக்கும் நிதி உதவியில் பள்ளியை நடத்துகிறேன். மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள், இந்த சமூகத்தில் முன்னேறி வர வேண்டும் என்பது, என் பள்ளியின் நோக்கம். மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுடன், கிரியேட்டிவ் ஆக பொருட்கள் செய்யவும் கற்று கொடுத்து வருகிறோம். பிள்ளைகளை முதலிலேயே பள்ளிக்கு அனுப்புங்கள் என்றால், பெற்றோர் கேட்பது இல்லை. பிள்ளைகள் வீட்டில் நிறைய சேட்டை செய்து, பெற்றோரால் சமாளிக்க முடியாத நிலையில் தான் இங்கு அனுப்புகின்றனர். இத்தகைய மாணவர்களை சமாளிப்பது எங்களுக்கும் முதலில் கஷ்டமாக உள்ளது. நாளடைவில் அமைதியாகி விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.