நவரா அரிசி சாகுபடியில் அசத்தும் தாவணகெரே பெண் விவசாயி
- நமது நிருபர் - கேரளாவில், அதீத மருத்துவ குணங்கள் கொண்ட நவரா அரிசி அதிகம் விளைவிக்கப்படுகிறது. கர்ப்பிணியர், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படும் நவரா அரிசியை, கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகா வெங்கடேஸ்புரா கிராமத்தின் மஞ்சுளா, 48, என்ற பெண் விவசாயி விளைவிக்கிறார். இதுகுறித்து மஞ்சுளா கூறியதாவது: எனது விவசாய நிலத்தில் இரண்டரை ஏக்கரில் நவரா அரிசி பயிரை பயிரிட்டு உள்ளேன். செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக தயாராகும் உரங்களை நெற்பயிர்களுக்கு பயன்படுத்துகிறேன். பயிரிட்டதில் இருந்து 50 நாட்களுக்குள் நவரா அரிசி விளைச்சலுக்கு வந்து விடுகிறது. நவரா அரிசியை விளைவிக்க தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. சந்தையில் தற்போது ஒரு கிலோ நவரா அரிசி 180 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அறுவடைக்கு பின் தலா 25 கிலோ எடையில் 40 மூட்டை அரிசி கிடைக்கிறது. பெங்களூரு, ஆந்திரா, ராய்ச்சூர், தார்வாட் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தேவைக்கு ஏற்ப ஏற்றுமதி செய்கிறோம். எனது கணவர் மரணத்திற்கு பின், விவசாயம் தான் எனக்கு கை கொடுத்தது. இதற்கு முன்பு பல ரக அரிசிகளை பயிரிட்டு உள்ளேன். விவசாயத்துடன், தையல் வேலையும் செய்கிறேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் விவசாயத்திற்கு உதவியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.