| ADDED : நவ 24, 2025 03:32 AM
இந்திய சைவ உணவுகளில் முக்கியமாக அப்பளம் விளங்குகிறது. பாயசத்தில் அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிடுவது தனி சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் அப்பளத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் கல்லிடைக்குறிச்சி அப்பளம் என்றால், நாடு முழுக்க பேமஸ் என்பதை எல்லாரும் அறிவர். இது போன்று கர்நாடகாவின் ஒரு ஊரில் அப்பளம் தயாரிப்பு பிரதான தொழிலாகவே உள்ளது. பெங்களூரின் அருகில் உள்ள சிக்கபல்லாபூரின் கவுரிபிதனுார் தாலுகாவில் கல்லோடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800 வீடுகள் உள்ளன. இதில் 700 வீடுகளில் வசிப்போரின் பிரதான தொழில் அப்பளம் தயாரிப்பது தான். அதிலும் பெண்கள் தான், அதிகம் அப்பளம் தயாரிக்கின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் சமூக ஆர்வலரான கங்கலட்சுமம்மா. வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே அப்பளம் தயாரித்து தொழில் முனைவோராக மாறலாம் என்று பெண்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து கங்கலட்சுமம்மா கூறியதாவது: பொதுவாக கிராம பகுதிகளில் உள்ள பெண்களுக்கு, நகர பகுதியில் சென்று வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வருவது பெரிய சவாலாக இருக்கும். இதனால் பெரும்பாலான வீடுகளில், பெண்களை வேலைக்கு அனுப்புவது இல்லை. எல்லாவற்றுக்கும் பெற்றோர், கணவர் கையை எதிர்பார்க்கும் நிலையில் பெண்கள் உள்ளனர். 1993ல் நான் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்தேன். என்னுடன் இணைந்து வேலை செய்ய, சில பெண்களுக்கு ஆசை இருந்தது. ஆனால் அவர்கள் வீடுகளில் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் அந்த பெண்களுக்கு, அவர்கள் வீட்டிற்கே சென்று, அப்பளம் தயாரிப்பது எப்படி என்று சொல்லி கொடுத்தேன். பெண்கள் தயாரிக்கும் அப்பளத்தை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அப்போது முதல் தற்போது வரை கல்லோடி கிராமத்தில் பல பெண்களின் கைத்தொழிலாக அப்பளம் தயாரிப்பு உள்ளது. பெண்களை தொழில் முனைவோராகவும் மாற்றி உள்ளது. கிராமத்தில் பிரதான தொழிலாகவும் திகழ்கிறது. இங்கு தயாரிக்கப்படும் அப்பளத்திற்கு பெங்களூரு, பிற மாவட்டங்களிலும் நல்ல மவுசு உள்ளது. காலம் மாறினாலும் அப்பளத்தை இயந்திரங்கள் மூலம் பெண்கள் தயாரிப்பது இல்லை. கையில் தான் தயாரிக்கின்றனர். பெங்களூருக்கு தினமும் ரயில், பஸ் மூலம் அப்பள பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .