உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / கன்னடத்தில் தேர்வு எழுதி எஸ்.ஐ., ஆன மராத்தி பெண்

கன்னடத்தில் தேர்வு எழுதி எஸ்.ஐ., ஆன மராத்தி பெண்

பெலகாவி டவுன் கங்க்ரோலி கே.ஹெச்.மார்க்கண்டேய நகரில் வசிக்கும் ஸ்ரீகாந்த், சுரேகா தம்பதியின் மகள் ஸ்ருதி பாட்டீல், 30. ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்று உள்ளார். பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். ஸ்ரீகாந்த் - சுரேகா தம்பதியின் பூர்வீகம் மஹாராஷ்டிரா என்றாலும், கடந்த 45 ஆண்டுகளாக பெலகாவியில் வசிக்கின்றனர். டாக்டராக பணியாற்றி வரும் ஸ்ருதி பாட்டீலுக்கு, அரசு துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசை வந்தது. கே.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு தயாரானார். கடந்த ஆண்டு 402 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப கர்நாடகாவில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை அவர் எழுதினார். இதில், 9வது இடத்தை பிடித்து உள்ளார். விரைவில் பணியில் சேர உள்ளார். இரு கண்கள் இதுகுறித்து ஸ்ருதி பாட்டீல் கூறியதாவது: பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போது மராத்தியை, முதல் பாடமாக எடுத்து படித்தேன். தற்போது எஸ்.ஐ., தேர்வை கன்னடத்தில் எழுதி வெற்றி பெற்று உள்ளேன். கன்னடம் கஷ்டமான மொழி இல்லை. கன்னடமும், மராத்தியும் எனக்கு இரு கண்கள் போன்றது. இரு மொழிகளையும் சரளமாக கற்று உள்ளேன். இதனால் என்னால் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற முடிந்தது. அரசின் தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் என்னுடைய ரோல் மாடல். கடந்த 2009ல் அவர் பெலகாவி கலெக்டராக இருந்தார். அந்த நேரத்தில் நான் உயர்நிலை பள்ளியில் படித்தேன். ஷாலினி செய்த மக்கள் பணிகளை பற்றி, தினமும் செய்தி தாளில் படிப்பேன். கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களுக்காக என்னென்ன பணிகளை செய்ய முடியும் என்று அவரை பார்த்து கற்று கொண்டேன். எதிர்காலம் இதுபோன்று கடந்த 2016ல் பெலகாவியில் அன்சார் ஷேக் என்ற இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியாற்றினார். அவரும் எனக்கும் ரோல் மாடல். பெலகாவி மினி இந்தியா போன்றது. இங்கு கன்னடம், மராத்தி, உருது, இந்தி உள்ளிட்ட பல மொழிகளை பேசும் மக்கள் வசிக்கின்றனர். நான் மராத்தி குடும்பம் என்பதால் ஆரம்பத்தில் கன்னடம் கற்று கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கற்றுக்கொண்டேன். பெங்களூரில் என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் கன்னடத்தில் தான் பேசுவேன். ஏதாவது சொந்த வழியில் சமூகத்திற்கு சேவை செய்து எனது ஆசை. எனது கணவர் ரிஷிகேஷ் தேசாய். டாக்டரான அவர் மும்பையில் மருத்துவமனை நடத்துகிறார். போட்டி தேர்வுக்கு தயாராக பயிற்சி மையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. இணையதளங்களில் நிறைய தகவல் கிடைக்கிறது. ஆனால் அதனை படிப்புக்காக மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பெலகாவியில் வசிக்கும் மராத்தி குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், கன்னட மொழி மீது வெறுப்பு கொள்ளாமல், கன்னடத்தை கற்று கொண்டு தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !