கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி
பெண்கள் மனம் வைத்தால், எதையும் சாதிக்க முடியும். எந்த தடைகளும் அவர்களுக்கு சாதாரணமானவை. இன்றைக்கும் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். முன் உதாரணமாக வாழ்கின்றனர். இவர்களின் வரிசையில் பவித்ரா பூமேஷும் சேர்ந்துள்ளார். தன் கணவரின் ஆசைப்படி ஸ்டூடியோ வைத்து, வெற்றிகரமாக நடத்துகிறார்.ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர் தாலுகாவில் வசித்து வந்தவர் பூமேஷ், 30. இவரது மனைவி பவித்ரா, 27. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பூமேஷ் மிகவும் திறமையான போட்டோ கிராபர். கேமரா வைத்திருக்கும் அனைவராலும், அதை சிறப்பாக கையாள முடியாது. ஆனால் இவரது கையில் கேமரா விளையாடும். அற்புதமான போட்டோகிராபர் என, பெயர் எடுத்தவர். விடா முயற்சி
இத்தாலுகாவின் பாளும்பேட்டே என்ற இடத்தில், 'கபாலி' என்ற பெயரில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். தனது ஸ்டூடியோவை தாலுகாவிலேயே பிரபலமானதாக்க வேண்டும். இதை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பது, அவரது கனவு. இதற்காக இரவு, பகலாக பாடுபட்டார். வாடகை கட்டடத்தில் செயல்பட்டது. சொந்த கட்டடத்தில் நடத்த வேண்டும் என, முயற்சித்தார். ஸ்டூடியோவில் கிடைத்த வருவாயை கொண்டு, தன் தாய், தந்தை, மனைவி, குழந்தையை காப்பாற்றினார்.நிச்சயதார்த்தம், திருமணங்கள், பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண வரவேற்பு உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவரை அழைப்பர். பாராட்டும் வகையில் போட்டோ, வீடியோ எடுத்து கொடுப்பார். மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில், விதி விளையாடியது. உடல்நிலை பாதிப்பால், ஓராண்டுக்கு முன் பூமேஷ் திடீரென காலமானார்.என்ன செய்வது என தெரியாமல் குடும்பம் தத்தளித்தது. அதன்பின் மாமியார், மாமனார், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை, பவித்ரா ஏற்றுக்கொண்டார். கணவர் விட்டு சென்ற கேமராவை கையில் எடுத்தார். அவர் நடத்திய போட்டோ ஸ்டூடியோவை மூடாமல், தானே எடுத்து நடத்த முடிவு செய்தார். அப்போது பலரும், 'நீ ஒரு சாதாரண பெண். அதிகம் வாடகை செலுத்தி, உன்னால் போட்டோ ஸ்டூடியோவை நடத்த முடியாது. அது மட்டுமின்றி, சிறு குழந்தை வைத்திருக்கிறாய். உனக்கு ஸ்டுடியோ அவசியமா' என, பலரும் கேள்வி எழுப்பினர். கிண்டல் செய்தனர். மன உறுதி
ஆனால் பவித்ரா எதையும் பொருட்படுத்தவில்லை. போட்டோ ஸ்டூடியோவை வெற்றிகரமாக நடத்துவேன்; என் கணவரின் ஆசையை நிறைவேற்றுவேன்; சாதித்து காட்டுவேன் என்பதில், உறுதியாக இருந்தார். அன்று முதல் போட்டோ கிராபராக வாழ்க்கையை துவக்கினார். இன்று அவர் பிரபலமான போட்டோ கிராபர். தன் கணவரின் ஆசைப்படி, அவர் நடத்திய அதே இடத்தில், அதி நவீன ஸ்டூடியோ நடத்துகிறார்.குறுகிய காலத்தில் அவரது ஸ்டூடியோ பிரபலமடைந்துள்ளது. தாலுகாவில், பிரபலமான மகளிர் போட்டோ கிராபர் என, பெயர் எடுத்துள்ளார். ஒரு பெண் தன் மாமியார், மாமனார் மற்றும் கைக்குழந்தையை பார்த்து கொண்டு, போட்டோ கிராபராக பணியாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இதை பவித்ரா வெற்றிகரமாக செய்கிறார். அவருக்கு குடும்பத்தினரும், பூமேஷின் நண்பர்களும் பக்கபலமாக நின்றுள்ளனர்.உன்னால் முடியாது என, கேலி செய்தவர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளார். மன உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதை பவித்ரா நிரூபித்துள்ளார். கணவரை இழந்து விட்டோம் என, மூலையில் முடங்காமல் வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார். துவண்டு கிடக்கும் பெண்களுக்கு, இவர் சிறந்த எடுத்துக்காட்டு - நமது நிருபர் -.