உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / வில் வித்தையில் சாதிக்கும் லாரி ஓட்டுநர் மகள்

வில் வித்தையில் சாதிக்கும் லாரி ஓட்டுநர் மகள்

கை விரல்களில் வித்தை காட்டும் வில் வித்தை, புராதன காலத்து வீர விளையாட்டு. அன்றைய காலத்தில் அரசர்கள், வில் வித்தையில் சிறந்து விளங்கினர். இந்த கலை இப்போதும் உயிரோட்டத்துடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.பொதுவாக ஆண்களே வில் வித்தையில் வல்லுநராக இருப்பர் என்ற கருத்து உள்ளது. ஆனால் பெண்களுக்கும் கைவந்த கலையாக உள்ளது. இதில் சாதனை செய்து அசத்துகின்றனர். இவர்களில் அன்னபூர்ணா சங்கண்ணா இப்ராஹிம்புராவும் ஒருவர். அவர் பல சாதனைகள் செய்து, விருதுகளை பெற்றுள்ளார்.யாத்கிர், சுரபுராவின் தேவபுரா கிராமத்தில் வசிப்பவர் அன்னபூர்ணா, 12. நடப்பாண்டு பிப்ரவரி 23ம் தேதி, பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில், ஆர்ச்சரி அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய அளவிலான தேர்வு போட்டியில், 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.

மின்னல் வேகம்

இவரது வில்லில் இருந்து, மின்னல் வேகத்தில் அம்பு பாய்ந்து சென்று, இலக்கை அடைந்ததை பார்த்து தேர்வு கமிட்டியினர் ஆச்சரியம் அடைந்தனர். ஆந்திராவின், குண்டூரில் மார்ச் இறுதி வாரம் தேசிய அளவிலான ஆர்ச்சரி சாம்பியன்ஷிப் போட்டியில், பெங்களூரின் தான்யாவுடன், அன்னபூர்ணாவும் பங்கேற்க உள்ளார். இதற்காக பயிற்சி பெற்று வருகிறார்.தேவபுரா கிராமத்தின், அரசு தொடக்க பள்ளியில் அன்னபூர்ணா, ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். தாய் கூலி வேலை செய்கிறார். வீட்டில் வறுமை நிலவுகிறது. அன்னபூர்ணா சிறு வயதிலேயே, பள்ளியில் நடக்கும் வில் வித்தை பயிற்சியை ஆர்வத்துடன் பார்ப்பார்.இவரது பெரியம்மாவின் மகன் மவுனேஷ் குமார் சிக்கனள்ளி, ஏகலைவா ஆர்ச்சரி அகாடமி நடத்துகிறார். தங்கை அன்னபூர்ணாவின் ஆர்வத்தை பார்த்து, அவருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்து வருகிறார். இவருடன் பாக்யஸ்ரீ கம்பாபுரா, பலபீமா கும்பாபுரா, மவுனேஷ் சிஞ்சோடி, அன்னபூர்ணாவின் அண்ணன் நவீன் இப்ராஹிம்புராவும், வில் வித்தையில் சாதனை செய்கின்றனர். இதில் அன்னபூர்ணா முன்னணியில் இருக்கிறார்.

பதக்கங்கள்

கடந்த 2024 ஜனவரியில், பெங்களூரில் வனவாசி அமைப்பின் சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2024 ஆகஸ்டில் பெங்களூரில் கர்நாடக அரசு சார்பில் நடந்த மினி ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள் பெற்றார். 2024 டிசம்பரில், சத்தீஸ்கரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.வில் வித்தை பயிற்சிக்காக, தெரிந்தவர்களிடம் உதவி கேட்டு, 15,000 ரூபாய் செலவில் வில், அம்புகள் வாங்கி உள்ளார். போட்டிகளில் பங்கேற்க இவருக்கு பணம் இல்லாதது, முட்டுக்கட்டையாக உள்ளது.ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்பது, இவரது குறிக்கோளாகும். ஆனால் பொருளாதார வசதி இல்லை. இவருக்கு உதவினால் வில் வித்தையில் சர்வதேச அளவில் ஜொலித்து, நாட்டுக்கு பெருமை சேர்ப்பார். இவருக்கு உதவ விரும்புவோர், அன்னபூர்ணாவின் தாயார் சகுந்தலாவை 88672 71942 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.

வனவாசி கல்யாணா

சங்க் பரிவாரின் அங்க அமைப்பான 'வனவாசி கல்யாணா' அமைப்பு, மலைப் பகுதிகளில் வசிக்கும் எஸ்.டி., சமுதாயத்தினரை முன்னிலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணிக்காக யாத்கிரி மாவட்டத்துக்கு, சீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுரபுரா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் எஸ்.டி., பிரிவினரை ஆய்வு செய்தார்.தேவபுரா கிராமத்தில் பலருக்கு, வில் வித்தையில் ஆர்வம் இருப்பதை கண்டார். 2012ல் பயிற்சியை துவக்கினார். கிராமத்தின் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் தினமும் வில் வித்தை பயிற்சி பெறுகின்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை