உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஸ்கேட்டிங்கில் கலக்கும் 9ம் வகுப்பு மாணவி

ஸ்கேட்டிங்கில் கலக்கும் 9ம் வகுப்பு மாணவி

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள மவுன்ட் கார்மல் சென்ட்ரல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெஸ்னியா கொரேரா, 15. இவரை, அவரது பள்ளியில் 'தங்கப்பெண்' என்று அழைக்கின்றனர். இதற்கு காரணம், மாணவி ஜெஸ்னியா ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வாங்கிக் குவிப்பதே. ஜெஸ்னியா, தன் சிறுவயதில் இருந்தே, ஸ்கேட்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஸ்கேட்டிங் செய்வது பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதை வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், தன் வாழ்க்கையாக நினைத்து தினமும் போராடி வருகிறார். இதனால், பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார். அதுமட்டுமின்றி, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் 23, 24ல் கேரளாவின் பாலக்காட்டில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் ஜெஸ்னியா பங்கேற்றார். இதில், 1,000 மற்றும் 5,00 மீட்டர் அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதை அவரது பள்ளி நிர்வாகம் கொண்டாடியது. ஜெஸ்னியாவின் பெயரும் பள்ளியில் பிரபலமடைந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மங்களூரில் உள்ள ஹை பிளையர்ஸ் ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட்டிங் கற்று வருகிறேன். என் பயிற்சியாளர்களான மோகன், பிரதீப் ராஜா, ராமானந்த், குமார் ஆகியோரிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். நான் இன்று சிறந்த ஸ்கேட்டிங் வீராங்கனையாக இருப்பதற்கு, என் பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமானது. என் பெற்றோர், ஆசிரியர், நண்பர் என அனைவரும் எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி