உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஸ்கூபா டைவிங்கில் நடிகை சிந்து லோக்நாத் சாதனை

ஸ்கூபா டைவிங்கில் நடிகை சிந்து லோக்நாத் சாதனை

இன்றைய நடிகைகளில் பலர், நடிப்புடன் விளையாட்டிலும் சூட்டிகையாக உள்ளனர். நடிகை சிந்து லோக்நாத், ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபடுகிறார். இதற்காக வெளி நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.நடிகை சிந்து லோக்நாத், பல 'ஹிட்' படங்களில் நடித்துள்ளார். திருமணமான பின்னும், நாயகியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்து ஓய்வு கிடைக்கும் போது, கடலில், 'ஸ்கூபா' டைவிங் எனும் கடலுக்கு அடியில் நீந்தி செல்லும் சாகச விளையாட்டில் ஈடுபடுவது அவரது பொழுது போக்காகும். ஆபத்தான விளையாட்டு என்பதால், ஆண்கள் மட்டும் இந்த சாகச விளையாட்டில் அதிகம் ஈடுபாடு காட்டினர். இப்போது பெண்களும் கூட, கடலுக்கு அடியில் சென்று சாகசம் செய்கின்றனர். நடிகை சிந்து லோக்நாத்தும் இந்த டைவிங்கில் கை தேர்ந்தவர். இந்தோனேஷியா, தாய்லாந்திலும் ஸ்கூபா டைவிங் செய்தார். சமீபத்தில் உத்தரகன்னடாவின், முருடேஸ்வரா அருகில் உள்ள நேத்ரானி தீவில் ஸ்கூபா டைவிங் செய்தார். இது மறக்க முடியாத அனுபவம் என, அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக, நடிகை சிந்து லோக்நாத் கூறியதாவது:நேத்ரானி தீவில் நான் மட்டுமல்ல, நடிகர்கள் புனித் ராஜ்குமார், தனஞ்செய் உட்பட பலரும் இங்கு டைவிங் செய்து அற்புதமான உணர்வை அனுபவித்துள்ளனர். இதற்கு முன் இந்தோனேஷியா, தாய்லாந்தில் செய்துள்ளேன். ஆனால் நேத்ரானியில் எனக்கு கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது.நேத்ரானியில் டைவிங் செய்ய, மூன்று மணி நேரம் தேவைப்படும். கடற்கரையில் இருந்து ஸ்பாட்டுக்கு அழைத்து செல்வர். அதற்கு முன்னர் சிறிய நீச்சல் குளத்தில் மூச்சு பயிற்சி அளிப்பர். நீரில் இருந்து சைகை மூலமாக பேசுவதை கற்றுக்கொடுப்பர். கடலுக்குள் என்னென்ன அபாயங்கள் ஏற்படும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி கற்றுத்தருவர். நம்முடன் ஒரு திறன் மிக்க நீச்சல் வீரர் இருப்பார்.நேத்ரானியில் நான் ஸ்கூபா டைவிங் செய்யும் போது, எங்கும் பார்க்காத மீன்கள், டால்பின்களை பார்த்தேன். ஸ்கூபா டைவிங் செய்ய விரும்புவோருக்கு, நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. டைவிங் சர்ட்டிபிகேட்டும் தேவையில்லை. ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகள் ஸ்கூபா டைவிங் செய்ய அனுமதி இல்லை.பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பர். பயப்படாமல் செய்து மகிழலாம். இதற்கு அதிகம் பணம் செலவாகும் என, பலர் கருதுகின்றனர். ஆனால் வெளி நாடுகளுடன் ஒப்பிட்டால், நமது நாட்டில் குறைவுதான். 5,000 ரூபாய் செலவாகும். இது போன்று, ஸ்கை டைவிங் உட்பட சில சாகச விளையாட்டுகளை செய்ய வேண்டும் என்பது, என் ஆசை. இந்தியாவில் அவ்வளவு முன்னேற்றம் இல்லை. வெளிநாடுகளில் சாகசங்களை செய்ய வேண்டும். அதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ