உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கதக்கில் இருந்து சிறந்த ஹாக்கி வீரராக உருவெடுக்கும் ஆதர்ஷ்

 கதக்கில் இருந்து சிறந்த ஹாக்கி வீரராக உருவெடுக்கும் ஆதர்ஷ்

- நமது நிருபர் - தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில், கர்நாடகாவில் இருந்து பங்கேற்று சாதனை படைத்தவர்கள் பெரும்பாலும், பழைய மைசூரு அல்லது மலை நாடு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக தான் இருப்பர். வட மாவட்டங்களில் இருந்து ஒருவர் விளையாட்டில் ஜொலிக்கிறார் என்பது பெரிய விஷயமே. ஏனென்றால் வட மாவட்டங்களில் போதிய, விளையாட்டு மைதான உள்கட்டமைப்பு வசதிகளே இல்லை. ஹாக்கி என்றாலே அது குடகு தான் என்று சொல்வோருக்கு மத்தியில், வட மாவட்ட வீரர்களாலும் ஹாக்கியில் ஜொலிக்க முடியும் என்று, ஆதர்ஷ் முடகர், 16, நிரூபித்து காட்டுகிறார். ஒரே வீரர் கதக் டவுனை சேர்ந்தவர் தான் ஆதர்ஷ் முடகர். மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். சிறு வயதில் இருந்தே ஹாக்கி விளையாடுவது இவருக்கு பிடித்து உள்ளது. மண் தரையில், கிரிக்கெட் மட்டையை வைத்து, ஹாக்கி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஹாக்கி மீதான இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர், சிலரின் உதவியுடன், விளையாட்டு துறையின் கீழ், ஹாக்கி பயிற்சி அளிக்கும் குழுவில் சேர்த்து விட்டனர். அங்கு சிறப்பாக செயல்பட்டதால், மாநில அளவிலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது, கர்நாடக சப் - ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளார். ஜப்பானில் வரும் 29ம் தேதி முதல், அடுத்த மாதம் 6ம் தேதி வரை, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க உள்ளது. அதில், இந்தியா சார்பில் பங்கேற்கும், 40 வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் ஆதர்ஷ் பெயரும் உள்ளது. இப்போட்டிக்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வான ஒரே வீரரும் இவர் தான்! நிறைய பதக்கம் இதுகுறித்து, ஆதர்ஷ் கூறியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை கோவிந்தப்பா உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். தாய் சாகம்மா கூலி வேலை பார்க்கிறார். எனக்கு முழு ஆதரவு தருவது, மாமா அனில் தான். விளையாட்டு துறையின் கீழ் ஹாக்கி பயிற்சி பெறும் போது, பயிற்சியாளர் விஜய் எனது ஆட்டத்தை மேம்படுத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்து உள்ளனர். அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன். முதல் முறையாக வெளிநாட்டிற்கு சென்று விளையாட உள்ளதை நினைத்தால் கொஞ்சம் பதற்றமாக தான் உள்ளது. எனக்கு யாரையும் தெரியாது. அதற்கு பின் சக விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து நண்பர்களாக மாறி விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. ஹாக்கி விளையாட்டில், இந்தியாவுக்காக நிறைய பதக்கங்களை பெற்று வர வேண்டும் என்பது எனது குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை