உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / சிறார்களுக்கு பண்டைய கால போர் கலை பயிற்சி

சிறார்களுக்கு பண்டைய கால போர் கலை பயிற்சி

இன்றைய பிள்ளைகள், மொபைல் போன்களுடன் ஒன்றி போயுள்ளனர். விளையாட்டு உட்பட பாடங்கள் சாராத விஷயங்களில் ஆர்வம் காட்டுவது இல்லை. இத்தகைய பிள்ளைகளுக்காக பெலகாவியில் பண்டைய கால போர்க்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.பெலகாவியின் சம்பாஜி மைதானத்தில் கடந்த 10 நாட்களாக, பள்ளி சிறார்களுக்கு பண்டைய காலத்து தற்காப்பு போர்க்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. சவ்யசாச்சி குருகுலம், கபிலேஸ்வரா மந்திர், சிவ பிரதிஷ்டானா அமைப்பின் ஒருங்கிணைப்பில், இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வம்

ஹாசன், தார்வாட், கதக், ஹூப்பள்ளி, பெலகாவி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் முகாமில் பங்கேற்று ஆர்வத்துடன் போர்க் கலைகளை கற்று கொண்டனர்.குறிப்பாக சிறுமியருக்கு, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்படும் விஷமிகளிடம் இருந்து எப்படி, தற்காத்து கொள்வது என பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 வயது முதல் 40 வயது வரையிலான நபர்களும் முகாமில் பங்கேற்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் முகாம் நடக்கிறது.தொலைவில் இருந்து வருவோருக்கு, இலவச உணவு, தங்கும் இடமும் செய்து தரப்படுகிறது. இந்த பயிற்சி சிறார்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது.

கோடை விடுமுறை

இது குறித்து, கபிலேஸ்வர மந்திர் செயலர் அபிஜித் சவுஹான், நேற்று அளித்த பேட்டி:கடந்த மூன்று ஆண்டுகளாக, கோடை விடுமுறையில் நாங்கள் போர்க்கலை பயிற்சி முகாம் ஏற்பாடு செய்கிறோம். முந்தைய ஆண்டு 60 சிறார்கள் பங்கேற்றனர். இம்முறை 300க்கும் மேற்பட்ட சிறார்கள், பெரியவர்கள் பங்கேற்றுள்ளனர்.வீர சிவாஜி, கித்துார் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா, சம்பாஜி மஹராஜ் போன்றோர் கையாண்ட போர்க் கலைகளை, சிறார்களுக்கு கற்றுத் தருகிறோம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் பெறுவதில்லை. முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.சமீப நாட்களாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதில் இருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து, கற்று தரப்படுகிறது. சூர்ய நமஸ்காரம், சிலம்பம், தடியடி, ஈட்டி எறிதல், வாள் வீச்சு என பலவிதமான தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது சிறார்களுக்கு புதிய உத்வேகம் ஏற்படுத்தியுள்ளது.இந்த காலத்து சிறார்கள், மொபைல் போனுக்கு அடிமையாக உள்ளனர். உடலை வருத்தி விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது இல்லை. இது அவர்களின் உடல், மனம் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே போர்க்கலை முகாம் நடத்துகிறோம். பெலகாவியின 12 ஆசிரியர்கள், மஹாராஷ்டிராவின் நான்கு ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்று, தற்காப்பு கலை பயிற்சி அளித்தனர்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !