உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஆசிய போட்டிக்கு தயாராகும் தடகள வீராங்கனை

ஆசிய போட்டிக்கு தயாராகும் தடகள வீராங்கனை

சிக்கமகளூரு மாவட்டம், ஷனுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சினேகா, 27; விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே வீட்டுக்கு உதவியாக விவசாய வேலைகள் செய்து வந்தார்.பள்ளி பருவத்தில் விளையாட்டு தனமாக, ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றார். இது அவரையும், அவர் குடும்பத்தினரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

'ஸ்பீடு சினேகா'

இதை பழக்கமாக மாற்றி, தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று, ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருமாறினார்.அதுவரை சினேகாவாக இருந்தவர், 'ஸ்பீடு சினேகா' என பள்ளியில் அழைக்கும் அளவுக்கு, மின்னல் வேகத்தில் ஓடினார். இவர் திறமையை பார்த்து, உஜ்ரேவில் உள்ள எஸ்.டி.எம்., கல்லுாரி, இலவச சீட் வழங்கியது. படிப்பை விட ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் காட்டினார். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார். கேரளா, கோட்டயத்தில் உள்ள மஹாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதும், கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

தங்க மகள்

ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்பதில் நிதி பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அல்வாஸ் கல்வி அறக்கட்டளை சினேகாவுக்கு உதவிக்கரம் நீட்டியது. 2023ல் தேசிய அளவில் நடந்த போட்டியில், 100 மீட்டர் துாரத்தை, 11.45 விநாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.

முதலிடம்

கடந்த மே மாதம் தென் கொரியாவில் நடந்த 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தொடர் ஓட்டப்பந்தயத்தில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்று பெருமை சேர்த்தார். சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சீனியர் தடகள போட்டியில், 100 மீட்டரை 11.52 விநாடிகளில் கடந்து முதலிடத்தை பெற்றார். இது குறித்து, சினேகா கூறியதாவது:மாநில அளவில் நடக்கும் போட்டிகளை விட, சர்வதேச அளவிலான போட்டிகளில் சுவாரஸ்யம் அதிகம். இதற்கு காரணம், சர்வதேச போட்டிகளில் இந்திய ஜெர்சியுடன் ஓடும் போது, நம் நாட்டிற்காக பதக்கத்தை பெற்றுவிட வேண்டும் என்ற வெறியுடன், வெறி கொண்ட வேங்கையை போல ஓடுவேன். ஓட்டப்பந்தயத்தில் ரெக்கார்டு என்பது பெரிதல்ல, நிலையானதும் அல்ல. வரும் தலைமுறையினர் ரெக்கார்டுகளை எல்லாம் எளிதில் தகர்த்து விடுவர். அடுத்த ஆண்டு ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதற்கு தயாராகி கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை