விராட் கோலி ஆட்டத்தை காண மரத்தில் ஏறிய ரசிகர்கள்
பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 'விஜய் ஹசாரே டிராபி' உள்ளூர் ஒரு நாள் தொடர் நேற்று முன்தினமே தொடங்கி விட்டது. இந்த ஆண்டு நடக்கும் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம், இந்த ஆண்டு தொடரில், இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாடுவதே. டில்லி - ஆந்திரா அணிகள் மோதும் முதல் போட்டி, பெங்களூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போட்டியை பெங்., சின்னசாமி மைதானத்தில் எப்படியாவது நடத்தி, மீண்டும் மைதானத்திற்கு நற்பெயரை ஏற்படுத்த வேண்டும் என, கர்நாடக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டது. இதற்காக, மாநில அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டியை நடத்த அனுமதி தரும்படியும் கோரிக்கை விடுத்தது. அனுமதியில்லை மைதானத்தில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதாலும், கோலியை காண கூடும் ரசிகர் கூட்டத்தால், மீண்டும் கூட்டநெரிசல் ஏற்படலாம் என்பதாலும், சின்னசாமி மைதானத்தில் போட்டியை நடத்த அனுமதியில்லை என்று, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் ஒரே போடாக போட்டு விட்டார். இதனால், பெங்களூரு எலஹங்காவில் உள்ள பி.சி.சி.ஐ.,யின் சென்டர் ஆப் எக்சலன்ஸ் மைதானத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் போட்டி நடந்தது. இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது, மற்றொரு சோகமான விஷயம். மரக்கிளையில் ரசிகர்கள் இது, விராட் கோலி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், 'கிங் கோலி'யின் ஆட்டத்தை பார்க்காமல் போக மாட்டோம் என முடிவு எடுத்த தீவிர ரசிகர்கள், மைதானத்தை சுற்றியுள்ள மரத்தின் கிளைகள் மீது ஏறி, போட்டியை கண்டு களித்தனர். ஆபத்தை உணராமல், கோலி அடிக்கும் சிக்சர்களுக்கு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதற்கு ஏற்றார் போல கோலியும், 83 பந்தில் சதம் விளாசினார். 101 பந்தில்131 ரன் எடுத்து அசத்தினார். இவரது அபார ஆட்டத்தால் டில்லி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது. இதுகுறித்த, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மரத்தில் ஏறி, ஆபத்தான முறையில் கோலியின் ஆட்டத்தை ரசிகர்கள் பார்த்தது குறித்து, பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு, விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் விராட் கோலியை காண ரசிகர்கள் மரம் ஏறியது ஒன்றும், அத்தனை ஆச்சரியம் இல்லை என, கோலியின் வெறித்தனமான ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். - நமது நிருபர் -: