மேலும் செய்திகள்
ஷ்ரேயஸ் மீண்டும் கேப்டன்
25-Sep-2025
மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திக் கிருஷ்ணா. இவர் தன் எட்டு வயதிலிருந்தே கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் துவக்கத்தில் செவன் ஹில்ஸ் கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி பெற்றார். பின், மைசூரு ராவ் பஹதூர் நரசப்பா கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார். இந்த கிளப்பின் 'ஏ' அணியில் இடம்பெற்றார். இந்த கிளப்பிலேயே தற்போதும் விளையாடி வருகிறார். பெங்களூரு வக்கீல் வல்ச்சர்ஸ் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர், 2018ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கிரண் மோர், அஜய் ராத்ரா ஆகியோர் முன்னிலையில் நடந்த சிறந்த விக்கெட் கீப்பர் தேர்வு செய்யும் போட்டியில் பங்கேற்றார். அப்போது, தன் அசாத்தியமான கீப்பிங் திறமையை காட்டினார். இதனால், 2019ம் ஆண்டு சேலஞ்சர்ஸ் டிராபியின் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய 'பி' அணியில் இடம்பெற்றார். இதைத்தொடர்ந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கிருத்திக் கிருஷ்ணா ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக மாநில அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால், அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ரஞ்சி கோப்பை போட்டி வரும் 15ம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், “கர்நாடக அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என, பல நாட்கள் கனவு கண்டுள்ளேன். இந்த கனவு பலித்துள்ளது. இதற்கு காரணமான என் பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என, அனைவருக்கும் நன்றி,” என்றார். - நமது நிருபர் -
25-Sep-2025