நீச்சல் போட்டியில் பதக்கங்களை அள்ளிய பெங்., மாணவ - மாணவியர்
பெங்களூரு: நான்காவது மினி கர்நாடகா விளையாட்டு தடகள போட்டிகளில் மாணவ - மாணவியர் தங்களின் திறமையையும், அணி வெற்றிக்காக குழுவாக செயல்பட்டதையும் காண முடிந்தது. கர்நாடகா ஒலிம்பிக் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, நான்காவது மினி கர்நாடகா போட்டிகள், கடந்த 2ம் தேதி பெங்களூரில் துவங்கியது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பெரும்பாலான போட்டிகள் நடக்கின்றன. ஐந்தாம் நாளான நேற்று, குண்டு எறிதல் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், ஹாசனின் சரண்யா 8.7 மீட்டர் துாரம் வீசி தங்கப்பதக்கம் பெற்றார். சாம்ராஜ் நகரின் மரியம் முகமது வெள்ளியும், தார்வாடின் தீபிகா வெண்கல பதக்கமும் பெற்றனர். 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 1.42 நிமிடங்களில், பாகல்கோட்டின் மேகா தங்கப்பதக்கம் பெற்றார். ஷிவமொக்காவின் ஸ்பூர்த்தி வெள்ளி பதக்கமும், உடுப்பியின் தான்வி வெண்கல பதக்கமும் பெற்றனர். மாணவர் பிரிவுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், தட்சிண கன்னடாவின் பிரனவ், 5.52 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தட்சிண கன்னடாவின் பிரசித் நவீன் ராவ் வெள்ளியும், உடுப்பியின் சுமீஷ் சுகேஷ் குமார் வெண்கல பதக்கமும் வென்றனர். மாணவர்களுக்கான 200 மீட்டர் 'பிரின்ட்' பிரிவு ஓட்டப்பந்தயத்தில், மைசூரின் ஆதர்ஷ், 24.18 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். தட்சிண கன்னடாவின் கவுசல் பானியன் வெள்ளியும், சித்ரதுர்காவின் சுபாஷ் வெண்கல பதக்கமும் பெற்றனர். மாணவர்களுக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயதில், தார்வாடின் சந்தீப் எல்லப்பா 1.29 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். பெலகாவியின் வீராஜ் மோனப்பா வெள்ளியும், ஹாசனின் சித்தாந்த் வெண்கலமும் பெற்றனர். மாணவியருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயதில், உத்தர கன்னடாவின் பூர்வி, 1.47 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கமும், பெலகாவியின் மாதுரி கஜனம் வெள்ளியும், பாகல்கோட்டின் மேகா வெண்கலமும் வென்றனர். மாணவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஷிவமொக்காவின் அமித், 33.66 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அதே மாவட்டத்தின் புனித் வெள்ளியும், சிக்கபல்லாபூரின் தீரஜ் வெண்கலமும் வென்றனர். மாணவியருக்கான 400 மீட்டர் 'ரிலே' ஓட்டப்பந்தயத்தில், தட்சிண கன்னடா மாணவியர் அணியினர், 53.19 விநாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றனர். பெங்களூரு தெற்கு அணியினர் வெள்ளியும், உத்தரகன்னடா அணியினர் வெண்கலமும் பெற்றனர். அதுபோன்று, மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயதில், மைசூரு மாணவர் அணியினர், 49.69 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். தட்சிண கன்னடா அணியினர் வெள்ளியும், பெலகாவி அணியினர் வெண்கலமும் பெற்றனர். மாணவர்களுக்கான பேட்மின்டன் போட்டியில் பெங்களூரின் ஹிஷான் ஹரிஷ் தங்கமும், மைசூரின் விஷால் உத்தப்பா வெள்ளியும், பெங்களூரின் மான்வித் மனிபெட்டு மற்றும் யக் தருண் ஆகிய இருவரும் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்களுக்கான பேட்மின்டன் போட்டியில், மைசூரின் ஹன்சிகா தங்கமும், பெங்களூரின் தக்ஷிதா வெள்ளியும், மைசூரின் பிரார்த்தனா, பெங்களூரின் லிவானா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர். லான் டென்னிசில் பெங்களூரின் மாதவ் தங்கமும், பெங்களூரின் நிஹால் வெள்ளியும், மாண்டியாவின் வச்சன் வெண்கலமும் வென்றனர். டேபிள் டென்னிசில் மாணவர் ஒற்றையர் பிரிவில், பெங்களூரின் சிவராம் கிரண் தங்கம், சார்வி சந்தீப் வெள்ளி, பிரதம், ஹர்ஷித் ஆகியோர் வெண்கலம் பெற்றனர். மாணவியர் ஒற்றையர் பிரிவில், பெங்களூரின் மிஹிகா தங்கம், மாண்டியாவின் ரச்சிதா வெள்ளியும், தார்வாடின் அதிதி, பெங்களூரின் ஐரீன் அன்னா ஆகியோர் வெண்கலம் வென்றனர். மாணவர் இருவர் பிரிவில், பெங்களூரு ஸ்ரீராம் தங்கமும், தட்சிண கன்னடாவின் சாஹி ரிஷித் வெள்ளியும், உடுப்பியின் சமர்த், மைசூரின் நிஷான் ஆகியோர் வெண்கலம் பெற்றனர். மாணவியர் இருவர் பிரிவில் பெங்களூரின் மிஹிகா தங்கமும், பெலகாவியின் ரியா வெள்ளியும், பெங்களூரின் சான்வி ரிச்சா, பல்லாரியின் ஜெய்தாஸ்ரீ ஆகியோர் வெண்கலம் பெற்றனர். மாணவர்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பெங்களூரின் சரண் தங்கம், அத்வைதா வெள்ளி, தேவேஷ் கோஷ் வெண்கலமும் பெற்றனர். மாணவியர் பிரிவில், பெங்களூரின் ஸ்துதி சிங் தங்கம், ஐரா பட் வெள்ளி, சிரி பிரீதம் வெண்கலம் பெற்றனர். மாணவர்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில், பெங்களூரின் சரண் தங்கம், ஷிவமொக்காவின் ரோஹன் வெள்ளி, பெங்களூரின் ரோனித் வெண்கலம் பெற்றனர். மாணவியர் பிரிவில் பெங்களூரின் சுமன்வி தெங்கம், மாண்டியாவின் அருத்ரா வெள்ளி, பெங்களூரின் ஸ்பர்ஷா வெண்கலமும் பெற்றனர். இதுபோன்று 1,500 மீட்டர் பிரீ ஸ்டைல், 50, 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக், 100, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் பெங்களூரு மாணவ - மாணவியர் பதக்கங்களை அள்ளினர்.