ராகுல் டிராவிட் மகனுக்கு கேப்டன் பதவி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் முக்கியமானவர் ராகுல் டிராவிட். இவர், தன் தடுப்பு ஆட்டத்தின் மூலம் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில், இந்தியா டி - 20 உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட்டத்தக்கது. இப்படிப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவானான ராகுல் டிராவிட்டுக்கு சமீத், அன்வே என, இரண்டு மகன்கள். 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா' என்பது போல இரண்டு மகன்களுமே கிரிக்கெட்டில் ஜொலித்து வருகின்றனர். இருவருமே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றால் இருக்காதா என்ன? அதிலும், இளைய மகன் அன்வே, தன் தந்தை ராகுலுக்கு மேலும் புகழை தேடித் தந்துள்ளார். இதற்கு காரணம், அன்வே 'வினு மன்கட் டிராபி'க்கான கர்நாடக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த இனிய செய்தியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஒரு நாள் கிரிக்கெட் டிராபி போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடக்கிறது. இதில், கர்நாடகா அணியின் கேப்டனாக களமிறங்கும் அன்வேவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து ஊக்கம் அளித்து வருகின்றனர். தேசிய அளவில் மாநில அணியை முன்னிலைப்படுத்துவதற்கு அன்வே தேர்வு செய்யப்பட்டதற்கு, கடந்த காலத்தில் அவர் புரிந்த சாதனைகள் முக்கியமாக உள்ளன. தன் சிறு வயதில் இருந்தே அன்வே கிரிக்கெட் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் ஜொலிக்கிறார். கடந்த ஆண்டுகளில் நடந்த விஜய் மெர்சன்ட் டிராபியில் அதிக ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு பலமாக இருந்தார். கர்நாடகா 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாகவும் இருந்தார். சிறுவயதிலே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவது குறித்த அனுபவங்களை சேகரிக்க துவங்கினார். இப்படி அவரது ரிக்காட்டின் அடிப்படையிலேயே கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வேயின் கிரிக்கெட் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக அமையும் என கிரிக்கெட் 'எக்ஸ்பர்ட்ஸ்' கூறுகின்றனர். வரும் காலத்தில் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் அன்வே தன் கிரிக்கெட் பயணத்தில், தன் தந்தை ராகுல் டிராவிட் தொட்ட உயரத்தை தொடுவாரா அல்லது அதையும் தாண்டி செல்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் - நமது நிருபர் - .