தடைகளை தாண்டி சாதித்த ராஜேஸ்வரி கெய்க்வாட்
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகள், விளையாட்டுகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்த ரசிகர்கள், தற்போது மகளிர் கிரிக்கெட்டையும் பார்க்கின்றனர். இதற்கு காரணம் வீராங்கனைகளின் அதிரடியான பேட்டிங், பந்துவீசும் திறமை தான். கிரிக்கெட் விளையாட்டில் பெண்கள் சாதிப்பது, எளிதானது விஷயம் இல்லை. அதிலும் கிராமப்புற பகுதியில் இருந்து வந்து, இந்திய அணிக்காக விளையாடி திறமையை வெளிகாட்டுவது பெரிய விஷயம். கிராம பகுதியில் இருந்து வந்து சாதித்த நிறைய வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜேஸ்வரி கெய்க்வாட், 34. கர்நாடகாவின் வடமாவட்டமான விஜயபுராவை சேர்ந்தவர். மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கு இருந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். கிரிக்கெட் வாழ்க்கைக்காக ராஜேஸ்வரி பல தடைகளை தாண்டி வந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை சிவானந்த் கெய்க்வாட், தாய் சாவித்ரி. ராமேஸ்வரி, புவனேஸ்வரி என இரு சகோதரிகளும், காசிநாத், விஸ்வநாத் என இரு சகோதரர்களும் உள்ளனர். எனக்கு 7 வயது இருக்கும் போது, எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து, பொழுது போக்கிற்காக டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். நான் நன்றாக விளையாடுவதை கவனித்த தந்தை, எனக்கு 14 வயது இருக்கும் போது, விஜயபுராவில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் சேர்த்து விட்டார். கிளப்பில் சேரும் போது, லெதர் பால் பற்றி எனக்கு தெரியாது. பந்தை பிடிக்கவே கஷ்டமாக இருந்தது. பயிற்சியாளர்கள் கேட்ச் பிடிக்க பயிற்சி அளித்த போது, கேட்ச்சுகளை பிடிக்க முடியவில்லை. இதனால் எனது தந்தை கடினமான டென்னிஸ் பந்தில், எனக்கு கேட்ச் பயிற்சி கொடுத்தார். பின், லெதர் பால் மீது இருந்த பயம் போனது. பேட்டிங் பிடிப்பதை விட பந்து வீசுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். துவக்கத்தில் மித வேக பந்து வீச்சாளராக இருந்தேன். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், கடந்த 2008 ல் கர்நாடகா மாநில அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கர்நாடகா அணிக்காக விளையாடிய எனது முதல் போட்டியில், ஒரே ஓவரில் 9 அகல பந்து வீசினேன். அந்த போட்டி முடிந்து சொந்த ஊருக்கு திரும்பியதும், கிளப் பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தேன். மிதவேகபந்து வீச்சாளராக இருக்க வேண்டாம். சுழற்பந்து வீச்சாளராக மாறி விடுங்கள் என்று என்னிடம் கூறினர். மித வேகத்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளராக மாறிய பின், கிளப் கிரிக்கெட்டில் பந்து வீசிய போது, எனது பந்தை எதிர்கொண்டவர்கள் அடித்து துவம்சம் செய்தனர். தவறுகளில் இருந்து பாடம் கற்பது போல, எந்த தவறு செய்தோம் என்று கண்டறிந்து, எனது பந்துவீச்சில் திருத்தம் செய்து கொண்டேன். கடந்த 2014 ல் இந்திய மகளிர் அணிக்கு விளையாடும் வாய்ப்பு வந்தது. எனது தந்தைக்கு மொபைல் போனில் தெரிவித்தேன். உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அந்த ஆண்டு மாரடைப்பால் இறந்தும் போனார். 2014 ம் ஆண்டு எனக்கு மகிழ்ச்சி, துக்கத்தை தந்த ஆண்டாக மாறியது. எனது முதல் கேப்டன் மிதாலி ராஜ். அவர் மிகவும் கூலான கேப்டன். ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலும் விளையாடி உள்ளேன். அவர் ஆக்ரோஷமான கேப்டன். ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதை செய்வார். என்னை பொறுத்தவரை இரண்டு கேப்டன்களும் சிறந்தவர்கள். விஜயபுரா போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணியில் ஆடுவது கடினமான விஷயம். இதற்கான பல தடைகளை கடந்து உள்ளேன். எனக்கு முழு ஆதரவும் தந்தை தான். எனது பயிற்சியாளர்கள் பங்களிப்பும் அதிகம். விளையாட்டின் போது ஏற்பட்ட காயம், அதனால் செய்த அறுவை சிகிச்சையால் கடந்த 2023க்கு பின் அணியில் இல்லை. மீண்டும் அணிக்கு திரும்புவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - -நமது நிருபர்--