நாவில் இனிக்கும் டபல் கா மிட்டா
- நமது நிருபர் -: வாயில் எச்சில் ஊற வைக்கும் தின்பண்டங்களில், டபல் கா மிட்டாவும் ஒன்றாகும். திடீரென விருந்தினர் வந்து விட்டால், சிறிது நேரத்தில் இதை செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை -முதலில் பிரட் ஸ்லைஸ்களை எடுத்து, ஓரங்களை அகற்றி விட்டு, நடுப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உலர வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை ஊற்றவும். காய்ந்த பின் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, சர்க்கரை, கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்த பின், புட் கலர், ஏலக்காய் துாள் சேர்க்கவும். அதன்பின் அதில் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க துவங்கியவுடன் பால் பொடி அல்லது கோவா சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதன் பின், இந்த கலவையில், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும். நெய் சேர்க்கவும். கலவை திரண்டு வரும் போது, முந்திரிப்பருப்பு, பாதாம், திராட்சை துாவி அலங்கரித்தால், சுவையான டபல் கா மிட்டா தயார். செய்வதும் எளிது. மூன்று நாட்கள் வரை கெடாது. டபல் கா மிட்டா, ஹோட்டல்களில் கிடைக்கும். ஆனால், அப்போதே செய்ததாக இருக்காது. நாமே வீட்டில் செய்தால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பண்டிகைகள், பிறந்த நாள் விழா, விருந்தினர் வரும் போது செய்யலாம். இந்த இனிப்பை செய்ய அதிகபட்சம் அரை மணி நேரமாகலாம். தேவையான பொருட்கள்: * பிரட் ஸ்லைஸ்கள் - 6 * எண்ணெய் - வறுக்க தேவையான அளவு * புட் கலர் - சிறிதளவு * ஏலக்காய் துாள் - கால் ஸ்பூன் * பால் - கால் லிட்டர் * கெட்டியான பால் - கால் கப் * கோவா அல்லது பால் பொடி - கால் கப் * நெய் - தேவைக்கு ஏற்ப * பாதாம் - 10 * திராட்சை - 10 * முந்திரிப்பருப்பு - 10 * மாதுளை முத்துகள் - 2 ஸ்பூன் * சர்க்கரை - கால் ஸ்பூன்