உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  பிளாஸ்டிக் மூடியில் உருவாகும் இருக்கை

 பிளாஸ்டிக் மூடியில் உருவாகும் இருக்கை

- நமது நிருபர் - மைசூரு மாநகராட்சி அலுவலகங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள், கண்களை கவர்கின்றன. மைசூரு மாநகராட்சிக்கு, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது, பெரும் தலைவலியாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி திட்டம் வகுத்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுடன், பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை மறு சுழற்சி செய்ய, பிஸ்லரி வாட்டர் பாட்டில் நிறுவனத்தினர் முன் வந்தனர். மைசூரு மாநகராட்சி ஒத்துழைப்புடன், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை பயன்படுத்தி, அழகான இருக்கைகள் தயாரித்துள்ளனர். இதுவரை, 19 இருக்கைகள் தயாரித்துள்ளனர். இவற்றை மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர். தங்களின் பணிக்காக இங்கு வரும் பொதுமக்கள் இந்த இருக்கைகளில் அமர்கின்றனர். இளம் பச்சை நிற பெயின்ட் அடித்திருப்பது, இருக்கைகளின் அழகை அதிகரித்துள்ளது. இது குறித்து, பிஸ்லரி நிறுவனத்தின் மைசூரு பிரிவு தலைவர் சூரஜ் கூறியதாவது: பொதுமக்களுக்கு துாய்மை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் நோக்கிலும், இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது பிளாஸ்டிக், அழகான இருக்கைகளாக மாறுகின்றன. இருக்கைகள் மீது வண்ண வண்ண செடிகள், மைசூரு அரண்மனை போன்ற வடிவம், சுற்றுச்சூழல் பற்றிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை, இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளிகள், தங்களின் கால்களால் வரைந்தனர். பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவான இருக்கைகளின் அழகை அதிகரித்ததில், மாற்றுத்திறனாளிகளின் உழைப்பும் உள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள், மிகவும் கெட்டியானவை. பழையதாகி உடைந்து போனால், மீண்டும் உருக்கி அதே பிளாஸ்டிக்கில் இருக்கைகளை செய்யலாம். பிளாஸ்டிக் கழிவு பிரச்னைக்கு, இத்திட்டம் நல்ல தீர்வாக இருக்கும். பொது மக்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ