உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்

காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்

இயற்கையை பாதிக்காத வகையில், குப்பையில் வீசப்படும் பயன்படுத்தப்பட்ட காகிதங்களை, மறுசுழற்சி முறையில் மீண்டும் 'ஸ்டேஷனரி பொருட்களை' விற்பனையும் செய்யும் நண்பர்கள்.பெங்களூரை சேர்ந்த நரேன் ராஜ், அசுதோஷ் ஆனந்த். இருவரும் நர்சரி காலத்தில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு செயின்ட் ஜோசப் கல்லுாரி, கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., முடிக்கும் வரை தொடர்ந்தது.

திருப்புமுனை

படிப்பு 2016ல் முடித்ததும், நரேன் ராஜ், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். ஆனால், அவருக்கு அப்பணியில் ஈடுபாடு இல்லை என்பதை இரண்டு மாதங்களில் உணர்ந்தார். அப்பணியை ராஜினாமா செய்தார். இவரது நண்பர் அசுதோஷ் ஆனந்த், தனது குடும்ப தொழிலை, பிடிப்பு இல்லாமல் கவனித்து வந்தார். சிறு வயதில் இருந்தே இருவரும் சேர்ந்து ஏதாவது ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்று பேசி வந்தனர்.கல்லுாரி படிப்பு முடிந்த பின்னரும் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். இவர்களின் யோசனைக்கு, 2019ல் தீர்வு கிடைத்தது. புதுடில்லியை சேர்ந்த தொழிலதிபரின் அறிமுகம் கிடைத்தது. இவர், காகித பென்சில் தயாரித்து, அதன் ஒரு முனையில் தாவர விதைகளை பதித்து, எழுதி முடிந்த பின், அந்த காகித பென்சில் முனையில் உள்ள விதையை மண்ணில் விதைத்து செடியாக வளர்ப்பதே திட்டம்.இந்த யோசனையுடன் நண்பர்கள் இருவரும் புதுடில்லி சென்றனர். காகித பென்சில் சப்ளையரை சந்தித்து, சில மாதிரிகளை பெற்று கொண்டு பெங்களூரு திரும்பினர். 'இ.ஒய்' என்ற உலகளாவிய தொழில் சேவை வழங்கும் நிறுவனத்திடம், தங்கள் யோசனையை தெரிவித்தனர்.

முதல் ஆர்டர்

இதன் பலனாக, மகளிர் தினத்தை ஒட்டி, ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. இது அவர்களின் பயணத்துக்கான முதல் படியாக மாறியது. இந்த வர்த்தகத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இது குறித்து நண்பர்கள் கூறியதாவது:ஒரு வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் மக்கள் தினமும் அதை பயன்படுத்த வேண்டும். இந்த பார்முலாவை உணர்ந்தோம். அந்த வேளையில் தான், கொரோனா பரவியது; அலுவலகங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரமும் இயங்கின. அவர்களுக்கு காகிதம் தேவைப்பட்டது. எனவே, பயன்படுத்திய காகிதங்களை மறுசுழற்சி செய்தால் என்ன என்ற யோசனை உதித்தது.காகிதம் என்பது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் ஒன்று. அதை ஆறேழு முறை மறுசுழற்சி செய்யலாம். இதிலும் பெரும்பாலானவை வீணாகாமல் இருக்கும்.

ரீ ஸ்கிரிப்ட் துவக்கம்

மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் தயாரிக்கும் நிறுவனத்தை 2021ல் 'ரீ ஸ்கிரிப்ட்' என்ற பெயரில் துவக்கினோம். குறிப்பேடுகள், பேனாக்கள், பென்சில்களாக மாற்றி, நிலையான எழுதுபொருளாக மாற்றினோம்.மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் கரடுமுரடானதாகவும், நார்ச்சத்துடனும் இருந்தது. இது அச்சு இயந்திரங்களை சேதப்படுத்தின. இந்த பிரச்னை ஏற்படாமல் மாற்றினோம். 'ஏ3', 'ஏ4, 'ஏ5' அளவில் காகிதங்கள் உருவாக்கி வருகிறோம்.நாங்கள் தயாரிக்கும் காகிதங்கள், வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு ரசாயனம் பயன்படுத்துவதில்லை. இதனால், எங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. கடந்தாண்டு எங்கள் நிறுவனம், 5 கோடி ரூபாய்க்கு வருவாய் பெற்றுள்ளோம்.

மறுசுழற்சி

ஆண்டுதோறும் 500 டன் காகித கழிவுகளை, மறுசுழற்சி செய்துள்ளோம். இதன் மூலம், 9,200 மரங்களை காப்பாற்றி உள்ளோம்.மேலும் விபரங்களுக்கு www.rescript.inஎன்ற இணையதளத்திலும், 98809 22399 என்ற மொபைல் எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி