மரங்களை நாம் பாதுகாத்தால், அது நம்மை பாதுகாக்கும்
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்று வாசகம் உள்ளது. மரம் வளர்ப்பது பல நன்மைகளை கொண்டது. மரம் வளர்த்தால் சுத்தமான காற்று, குடிநீர் கிடைக்கும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த மரம் வளர்ப்பது நன்மையாக உள்ளது.தற்போது பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரயில் பாதை, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக மரத்தை வெட்டி அகற்றுகின்றனர். மரத்தை முழுமையாக வெட்டுவதை விட, வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினால், அதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை.இப்படிப்பட்ட நிலையில் வேதியியல் இன்ஜினியரிங் பட்டதாரி, மரங்களின் பாதுகாவலராக உள்ளார். அவரது பெயர் வேணு, 38. துமகூரின் குனிகல் டவுன் பதஞ்சலி நகரை சேர்ந்தவர். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மரங்களை பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார். யாரிடம் இருந்தும் உதவியை எதிர்பார்க்காமல் தான் சம்பாதிக்கும் பணத்தில் மரக்கன்றுகள் வாங்கி, நட்டு தனி கவனம் செலுத்தி வளர்க்கிறார்.சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்படுகிறது என்ற தகவல் கிடைத்தால், அந்த இடத்திற்கு சென்று, 'மரங்களை தயவு செய்து வெட்டாதீர்கள்; கிரேன் உதவியுடன் மரங்களை வேருடன் அகற்றி, வேறு இடத்தில் நட்டு வையுங்கள்' என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து, அதை நிறைவேற்றியும் விடுகிறார்.கடந்த மாதம் ஹுலியூர்துர்கா என்ற இடத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டு பழமையான அரளி மரத்தை வெட்டி, அகற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர். வனத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர். அவரது முயற்சியால் மரம் வெட்டாமல் வேருடன் அகற்றப்பட்டு ரங்கசாமி மலைப்பகுதியில் நடப்பட்டது.குனிகல்லில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் உள்ள பாலேகவுடா பூங்காவில் உள்ள மரங்களை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை வேணு ஏற்று உள்ளார்.பூங்காவில் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை செடிகளை நட்டு வளர்க்கிறார். வேலை முடிந்து வீடு திரும்பியதும், ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் பூங்காவுக்கு சென்று மரங்களை பராமரிக்கிறார்.வேணு கூறுகையில், ''மரங்களை நாம் பாதுகாத்தால், மரம் நம்மை பாதுகாக்கும். மரங்களை பராமரிப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். சுற்றுச்சூழல் குறித்து பள்ளி மாணவ, மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். - நமது நிருபர் -