சிறந்த குடிமக்களை உருவாக்கும் பட்டறை சாரணர் இயக்கம்
உ லகளவில் பரவி இருக்கும் இளைஞர்கள் இயக்கமே சாரணர் இயக்கம். இதை, 1907ம் ஆண்டு இங்கிலாந்தில் லார்ட் பேட்டன் பவுல் என்பவர் ஏற்படுத்தினார். சிறந்த இளைஞர்களால் மட்டுமே ஒரு நாட்டை காப்பாற்ற முடியும். எனவே, இளைஞர்களின் உடல், மனம், அறிவு, குண நலன்களை வளர்த்து, நல்ல குடிமக்களாக உருவாக்குவதே சாரணர் இயக்கத்தின் பிரதான நோக்கமாகும். இயற்கை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் ஒழுக்கம், தன்னம்பிக்கை வளர்த்தல், தலைமைத் திறன், சேவை மனப்பான்மை, பொறுப்புணர்வை ஊக்குவித்தல் ஆகியவை சாரணர்களின் பயிற்சி. சகோதரத்துவ உணர்வு, தேசிய ஒருமைப்பாடு ஊட்டுதல், சுத்தம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற பண்புகளை இளைஞர்கள் மத்தியில் உருவாக்குவது தான் இதன் நோக்கம். குறிக்கோள் சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகளாக முகாம்கள், பயணங்கள், நடைபயணங்கள், சமூக சேவை, மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், வெள்ளம், தீ, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் உதவி புரிதல், உடற்பயிற்சி, விளையாட்டு, முதலுதவி செய்தல், பயிற்சி அளித்தல் ஆகியவை முக்கியமாகும். கடவுளுக்கும், நாட்டிற்கும், பிறருக்கும் சேவை செய்வது; அனைவருக்கும் நண்பன், சகோதரனாக இருப்பது; நல்லவராக, கருணை உள்ளவராக இருப்பது; இயற்கை உயிரினங்களை நேசிப்பது; கட்டுப்பாடு, கீழ் படிந்து நடப்பது; சிரம நேரங்களில் துணிவாக செயல்படுவது, சிந்தனை, சொல், செயல் அனைத்திலுமே நேர்மையை கடைப்பிடிப்பது ஆகியவற்றை சாரணர்களின் லட்சிய நெறியாக கடைப்பிடிக்கின்றனர். சம்பளம் கிடையாது இந்த அடிப்படை கருத்துகளுடன் நெறிமுறைகள் சிறப்பாக இருப்பதால், சாரணர் இயக்கம், சிறந்த குடிமக்களை உருவாக்கும் வல்லமை மிக்க பட்டறையாகும். நம் தேசத்தில் சாரணர் இயக்கத்தையும், அவர்களின் தன்னார்வ தொண்டுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. இது, ஒரு சம்பளம் பெறாத கவுரவ சேவையாகும் . கோலார் மாவட்ட சாரணர் இயக்க துணை ஆணையர் பிரபு ராம் கூறுகையில், ''நம் நாடு, உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு. சிறந்த குடிமக்களால் தான், நம் நாட்டை காப்பாற்ற முடியும். கர்நாடகாவில் 31 மாவட்டங்களிலும் சாரணர் - சாரணியர் இயக்கம் உள்ளது. எனவே, மாணவ பருவத்திலேயே தேசிய ஒருமைப்பாடு வளர்க்கவும், தேசிய வளர்ச்சி பணிகளில் அக்கறை செலுத்தவும் ஒழுக்கம் கற்பிக்கும் சாரணர் இயக்கத்தில் மாணவர்களை சேர்த்து ஊக்குவிக்கிறோம்,'' என்றார் - நமது நிருபர் -.