காணாமல் போன தவளை சத்தம்
மழை வந்தாலே இரவு முழுவதும் தவளை சத்தம் கேட்கும். இப்போது வெறும் அமைதி. தவளைகள் எங்கே? அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. அழியும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெறலாம் என்கிற அபாயம் உருவாகி இருக்கிறது. தவளைகளை காப்பது ஒரு உயிரினத்தை மட்டும் காப்பதல்ல; நம்மை காக்கும் இயற்கைச் சமநிலையை காப்பதாகும். வீடு, வயல்வெளி, குளம், குட்டை என நீர் இருக்கும் இடமெல்லாம் காணப்பட்ட தவளைகள் பெரிதும் குறைந்து விட்டன. நீர்நிலைகள் அழிக்கப்படுவது, நகர மயம், விவசாயத்தில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், நீர் மாசு, காலநிலை மாற்றம் மற்றும் நோய்கள் இதற்கு காரணங்கள். குறிப்பாக, தவளைகளின் தோல் மிகவும் நுண்ணியது என்பதால், சூழல் மாசு அதை அதிகம் பாதிக்கும். குளம் குட்டைகள் தவளைகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய இடங்கள். அவை ஆக்கிரமிக்கப்படும்போதும், கழிவுகள் ரசாயனங்களால் மாசுபடும்போதும் தவளைகளின் வாழ்விடம் சுருங்குகிறது. தவளை சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொசு, பூச்சி உள்ளிட்ட சிறு உயிரினங்களை உணவாக கொள்ளும் தவளைகள், இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டில் பங்கு அளிக்கின்றன. தவளைகளின் எண்ணிக்கை குறைவது, உணவுச் சங்கிலியில் ஏற்படும் மாற்றத்திற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இதை ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை குறைவாக பார்க்காமல், இயற்கைச் சுழற்சியின் மாற்றத்துக்கான எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். உலகளவில் நீர்நில வாழ்வினங்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. 2023-ல் நடந்த உலகளாவிய ஆய்வில், இந்த உயிரினங்களில் 41 சதவீதம் அழியும் அபாயத்தில் இருப்பதாக தெரிந்தது. வாழ்விட இழப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், காலநிலை மாற்றம் மற்றும் நோய்கள் அடுத்த நிலை அச்சுறுத்தல்களாகவும் இருக்கின்றன. நீர்நிலைகளில் கழிவு கொட்டாமல் இருப்பது, ரசாயன பயன்பாட்டை குறைப்பது ஆகியவற்றின் வாயிலாக தவளைகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
குறைகிறது நீர் பறவை