படர்தாமரை என்பது பூஞ்சை (ஃபங்கஸ்) தொற்றால் ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அதிக உஷ்ணம் அல்லது அதிக ஈரப்பதம் கொண்டிருக்கும் சருமத்தில் இவை உண்டாகக் கூடும். ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் பின்விளைவுகளை எளிதில் தவிர்க்கலாம். அதை விடுத்து சின்ன அரிப்புத்தானே என கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், சருமம் தடிப்பு மற்றும் அரிப்பு அதிகரிக்கும். ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடும். யாருக்கு வரும்?: பொதுவாக உடலின் மறைவுப் பகுதிகளான இடுப்பு, அக்குள், தொடைப்பகுதியில் இவை உண்டாகிறது. அதிலும் விளையாட்டு வீரர்கள், தண்ணீரில் அதிகம் புழங்குபவர்கள், உடலில் அதிகம் வியர்வை வருபவர்களுக்கு படர்தாமரை வரலாம். பிற பெயர்கள்:
தலைப்படை, தொடையிடுக்கு படை, நகப்படை, சேற்றுப்புண் என எந்த இடத்தில் இது வருகிறதோ அந்த இடத்திற்கு ஏற்றார்போல் அவை அழைக்கப்படுகிறது.அறிகுறிகள்படர் தாமரை தோன்றிய இடங்களில், முதலில் தோல் சற்று சிவந்து நிறமாற்றம் ஏற்படும். பின் சிறிது நாட்களில் அவை அடர் கறுப்பு நிறமாகிவிடும். குறிப்பாக வளையம் போன்று தழும்பாக காட்சியளிக்கும். தீராத அரிக்கும் தன்மை உடையது. படர்தாமரை பரவும்:படர்தாமரை இருக்கும் இடத்தில் சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீரினால், மற்ற பாகங்களுக்கும் பரவும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள். படர் தாமரை பரவும் இடங்கள் என்று பார்த்தால் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு, கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் ஏற்படும். அதனால் அவை பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். படர்தாமரை வராமல் தடுக்க சில டிப்ஸ் :
• அதிகம் வியர்பவர்கள் தினமும் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். • குளித்த உடன் ஒரு துண்டைக் கொண்டு உடலை ஈரம் இல்லாதவாறு சுத்தமாக துடைக்க வேண்டும். • குறிப்பாக ஈரம் இல்லாத நன்கு காய்ந்த ஆடைகளை அணிய வேண்டும். • உடல் முழுவதும் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.• வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், சட்டை, பேண்ட், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உப்யோகிக்க கூடாது. • படர்தாமரை வந்த உடன் சரும நல மருத்துவரின் உதவியை நாடுங்கள்.• ஜீன்ஸ் போன்ற கனத்த ஆடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணியுங்கள். சிந்தெட்டிக் உடைகளையும் தவிர்க்கலாம்.• இது ஒரு தொற்று என்பதால் உங்கள் துண்டு, சோப்பு போன்றவற்றை மற்றவர்களோடு பகிராதீர்கள்.