உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் வரும் சிக்கல்கள்

குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் வரும் சிக்கல்கள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், படிப்பு மற்றும் பொழுதுபோக்கு எனப் பல்வேறு தேவைகளுக்காகக் குழந்தைகள் மொபைல் போன், டேப்லெட், கணினி போன்ற சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கேம்கள், கார்ட்டூன்கள் பார்ப்பது என குழந்தைகளின் திரை நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படுமா? சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுமா என்ற கவலை பல பெற்றோர்களுக்கும் எழுந்துள்ளது.சமீபகாலமாக குழந்தைகளிடையே கிட்டப்பார்வை பிரச்சினை அதிகரித்து வருவது மிகுந்த கவனத்திற்குரிய விஷயமாகும். கிட்டப்பார்வை என்பது அருகில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தாலும், தொலைவில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத ஒரு பார்வைக் குறைபாடாகும். குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல், டேப்லெட், கணினி போன்ற திரைகளைப் பார்ப்பது கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஏனெனில், குழந்தைகள் நீண்ட நேரம் அருகில் உள்ள பொருட்களையே உற்றுப் பார்க்கும்போது, வெளிப்புறச் செயல்பாடுகளுக்குச் செலவிடும் நேரம் குறைகிறது. குறிப்பாக, வெளியில் விளையாடுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்பாடுகள் குறைந்து, வீட்டிற்குள்ளேயே திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் அதிகரிக்கிறது. இத்தகைய வாழ்க்கை முறை குழந்தைகளிடையே கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.திரை நேரம் மட்டுமே கிட்டப்பார்வைக்குக் காரணம் கிடையாது. மரபணுக் காரணங்கள், குடும்பத்தில் பெற்றோருக்கு கிட்டப்பார்வை இருப்பது, வெளிப்புறச் செயல்பாடுகள் குறைவாக இருப்பது போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ கிட்டப்பார்வை இருந்தால், குழந்தைக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.குழந்தைகள் இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் மொபைல் அல்லது கணினித் திரைகளைப் பார்க்கும்போது கண்களுக்கு அதிகச் சோர்வு ஏற்படலாம். குறிப்பாக, மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்ப்பது கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். இதனால், கண்களில் வறட்சி ஏற்படுதல், தலைவலி, கண் சோர்வு மற்றும் தற்காலிகமாகப் பார்வை மங்கலாகத் தெரிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட செய்யலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் அனைத்தும் கிட்டப்பார்வையைக் குறிக்காது. தொடர்ந்து இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.குழந்தைகள் தங்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதை ஆரம்பத்திலேயே உணராமல் இருக்கலாம். சில குழந்தைகள் பார்வை மங்கலாக இருப்பதையே இயல்பானதாக நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும்.தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்போது கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, டிவியை மிக அருகில் அமர்ந்து பார்ப்பது, புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்துப் படிப்பது, வகுப்பறை போர்டில் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கச் சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே கிட்டப்பார்வையைக் கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது, எதிர்காலத்தில் கிட்டப்பார்வையால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !