சாதாரண சளிக்கும் நிமோனியாவுக்கும் என்ன வித்தியாசம்
சாதாரண சளி, இருமல் போன்ற பாதிப்புகளை நாம் பெரும்பாலும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் நிமோனியா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நிமோனியா அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம்.சாதாரண சளி என்பது முக்கியமாக தும்மல், மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டது. இதுவே நாம் பொதுவாக சளி என்று அழைக்கிறோம். ஆனால், நிமோனியா என்று வரும்போது, இந்தத் தொற்று நுரையீரலைப் பாதிக்கிறது. அங்கு திரவம் ஒரு நீர் போன்ற வடிவத்திலோ அல்லது அடர்த்தியான உறை நிலையிலோ இருக்கலாம். இதனால் நோயாளிக்கு அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தீவிரமான இருமல் ஏற்படுகிறது. நோயாளிகள் மிகவும் சோர்வாக உணர்வதுடன், சிலர் தூக்க கலக்கத்திற்கோ அல்லது அதிக சோர்வுக்கோ கூட ஆளாகலாம்.நிமோனியா என்பது பாக்டீரியா தொற்றால் மட்டுமே ஏற்படக்கூடிய பாதிப்பு அல்ல. வைரஸ், பாக்டீரியா மற்றும் சில வகையான பூஞ்சைகள் மூலமாகவும் நிமோனியா ஏற்படலாம். காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவும் நுரையீரலைப் பாதித்து நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.பொதுவாக, மேல் சுவாசப் பாதையைப் பாதிக்கும் தொற்றுகளுக்கும், நுரையீரலைப் பாதிக்கும் தொற்றுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. நிமோனியா ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய நோயாளியின் அறிகுறிகள், உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்பு எக்ஸ்ரேவில் நுரையீரலில் சில ஒளிபுகாத் தன்மைகள் தென்படலாம். இவை நிமோனியாவை கண்டறிய உதவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும்.நிமோனியா யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இருப்பினும், சில வயதுப் பிரிவினருக்கும் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் இதன் பாதிப்பு மற்றும் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கலாம்.5 வயதுக்குட்பட்ட சிறிய குழந்தைகள், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள், கல்லீரல் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், புற்றுநோய் நோயாளிகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் நிமோனியாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.நிமோனியாவை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளில் நிமோகாக்கல் பாக்டீரியாவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை அல்லது இணை நோய் உள்ளவர்களை, இந்த பாக்டீரியா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நிமோகாக்கல் தடுப்பூசி உதவுகிறது. அதிக ஆபத்துள்ள பிரிவினர் தங்களுடைய வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.