எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும்?
ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவுகள், சமைக்காத உணவுகள், பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிய மூன்று வகையான உணவுகளும் தேவை. எதை பச்சையாக எடுத்துக்கொள்வது, எதை அரை வேக்காட்டில் சாப்பிடுவது, எதை நன்கு சமைத்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் பலவித குழப்பம் ஏற்படுகிறது. சமைத்த உணவுகள்: ஓர் உணவை அதன் இயல்பான நிலையில் இருந்து முற்றிலும் வேறொரு நிலைக்கு மாற்ற நீரில் வேக வைத்தோ, நீராவியால் வேகவைத்தோ, எண்ணெயில் வறுத்தோ, வதக்கியோ, பதப்படுத்திகள் சேர்த்தோ, சூடுபடுத்தியோ சமைத்துச் சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. தானியம், பருப்பு போன்றவற்றை அப்படியே சாப்பிட்டால், அதனை செரிக்கும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனால், இந்த உணவுகளைச் சமைத்துச் சாப்பிடும்போது, நம் உடலில் உள்ள 'என்ஸைம்கள்' மூலம் உணவு செரிக்கப்பட்டு, சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. பொதுவாக, சமைத்த உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கும். இதுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறது. சமைத்த உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். பச்சைப் பயறை நீரில் ஊறவைத்து, அடுத்த நாள் முளைவிட்ட பிறகு பச்சையாகச் சாப்பிடுவதை 'பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவு' என்கிறோம். இந்த முறையில் தண்ணீரில் ஊறவைக்கப் படுவதால் பல புதிய நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு, பாதாம் பருப்பில் புரதச்சத்து அதிகம்; வைட்டமின் சி குறைவு. பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடும்போது, வைட்டமின் சி அதிகம் கிடைக்கும். பாதாம், பிஸ்தா முதலான நட்ஸ் வகைகளைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. சமைக்காத உணவுகள் ஓர் உணவுப்பொருளை அதன் தன்மையை மாற்றாமல், வேறொரு உணவுப்பொருளோடு கலக்காமல், அப்படியே சாப்பிட ஏற்ற உணவுகள் அனைத்துமே 'சமைக்காத உணவுகள்' என்ற வகையைச் சேரும். விலங்கு, தாவரம் முதலியவற்றில் இருந்து கிடைக்கும் உணவுகள் அனைத்துமே சமைக்காத உணவுகளே. ஆனால், இவற்றில் பெரும்பாலான உணவுகளை, செரிமானப் பிரச்னையைத் தடுக்க, சமைத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கும். எந்தெந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் ? சமைத்து சாப்பிட அரிசி, கோதுமை, துவரை முதலான பருப்பு வகைகள் அனைத்தும். வேர்க்கடலை போன்ற தாமதமாகச் செரிமானமாகும் நட்ஸ் வகைகள், கீரைகள், மீன், கோழி, ஆடு, முட்டை, பால், கிரில்டு உணவுகள், சூப், ரசம், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி. பாதி பக்குவப்படுத்தி உண்ண முளைகட்டிய பயறுகள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள். பனீர், சீஸ், வெண்ணெய், தயிர், அவல் பொரி. சமைக்காமல் அப்படியே சாப்பிட காய்கறிகள், பழங்கள், தேன், முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள், சாலட்.