உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / இரண்டு நதிகள் சங்கமிக்கும் ஷிவமொக்கா கூட்லி கிராமம்

இரண்டு நதிகள் சங்கமிக்கும் ஷிவமொக்கா கூட்லி கிராமம்

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று ஷிவமொக்கா அழைக்கப்படுகிறது. இங்கு பாக்கு விளைச்சல் பிரதான தொழிலாக உள்ளது. ஏராளமான பழங்கால கோவில்களும் இங்கு உள்ளன.ஜோக், சக்ரேரைலு, கோடசாத்ரி, லிங்கனமக்கி அணை, ஆகும்பே, காவல்துர்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. புகழ்பெற்ற காஜனுார் அணையும் உள்ளது.கர்நாடகாவின் வடமாவட்டங்கள், ஆந்திராவின் குடிநீர், விவசாய தேவைகளை நிறைவேற்றும் ஆறாக துங்கபத்ரா உள்ளது. துங்கா, பத்ரா ஆறுகள் எங்கு உருவாகின்றன. எங்கு சங்கமிக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.சிக்கமகளூரு மாவட்டத்தின் வரஹா பத்ரா என்ற இடத்தில் இருந்து துங்கா ஆறு உற்பத்தி ஆகிறது. குதிரேமுக்கா கங்காமூலா வனப்பகுதியில் இருந்து பத்ரா ஆறு உற்பத்தியாகிறது. இந்த இரண்டு ஆறுகளும் வெவ்வேறு திசைகளில் பாய்ந்து ஓடுகின்றன.பத்ரா நதி நீர் தரிகெரே, பத்ராவதி வழியாக செல்கிறது. துங்கா ஆற்றின் தண்ணீர் சிருங்கேரி, தீர்த்தஹள்ளி தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் வழியாக வந்து, ஷிவமொக்கா தாலுகாவின் கூட்லி என்ற இடத்திற்கு வருகிறது. இந்த கிராமத்தில் இரண்டு ஆறுகளும் சங்கமிக்கின்றன.அதன் பிறகு துங்கபத்ரா ஆற்றின் தண்ணீர், தாவணகெரே மாவட்டம் ஹொன்னாளி, ஹரிஹரா வழியாக பல்லாரி மாவட்டத்தின் ஹரப்பனஹள்ளி, ஹகரிபொம்மஹள்ளி, ஊவின அடஹள்ளி, ஹொஸ்பேட், சிறுகுப்பா வழியாக பாய்கிறது.பின், கொப்பால், ராய்ச்சூர் மாவட்டங்களுக்குள் நுழைந்து மந்த்ராலயம் வழியாக ஆந்திராவுக்குள் பாய்ந்து கர்னுாலுக்கு செல்கிறது. பின், தெலுங்கானா மாநிலத்தின் ஜோகுலாம்பா கட்வால் வழியாக கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது.இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடமாக கூட்லி கிராமம் உள்ளதால், அது சுற்றுலா தலமாகவும் மாறி உள்ளது. பச்சை, பசலேன காட்சி அளிக்கும் இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக உள்ளது.இரு ஆறுகளின் கரையிலும் கூடாரம் அமைத்து ஆறுகளில் சங்கமிப்பதை சுற்றுலா பயணியர் கண்டுரசிக்கின்றனர். ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள 'வியூ பாயின்ட்'டில் நின்று உற்சாகமாக 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர்.கூட்லி கிராமத்திலும் பழங்கால கோவில்களும் உள்ளன.பெங்களூரில் இருந்து கூட்லி கிராமம் 320 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து ஷிவமொக்காவுக்கு அடிக்கடி பஸ் சேவை உள்ளது. ரயில், விமான சேவையும் உள்ளது. ஷிவமொக்காவில் இருந்து கூட்லிக்கு பஸ், வாடகை கார்கள் மூலம் செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !