உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / அடர்ந்த வனத்துக்குள் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சி

அடர்ந்த வனத்துக்குள் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சி

மழைக்காலம் வந்தாலே, மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளை காண, சுற்றுலா பயணியர் குவிவர். குறிப்பாக, சிக்கமகளூரின் நீர்வீழ்ச்சிகள் என்றால், மக்களுக்கு ஒரே ஜாலி தான். சிக்கமகளூரு மாவட்டத்தில் கல்லத்திகிரி, ஜரி நீர்வீழ்ச்சி, பன்டாஜே உட்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சுற்றுலா பயணியர் இந்த நீர்வீழ்ச்சிகளை ரசித்து விட்டுச் செல்வர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி நடுவே, ரகசியமாக பாயும் காமேனஹள்ளி நீர்வீழ்ச்சியை பற்றி, பலருக்கும் தெரியாது. நண்பர்களுடன் மலையேற்றம் சாகசம் செய்து, இயற்கையை ரசித்து, ஜாலியாக பொழுது போக்க காமேனஹள்ளி நீர்வீழ்ச்சி பொருத்தமானது. ஆனால் காமேனஹள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வனப்பகுதியின் கரடு முரடான பாதைகள், அபாயமான பாறைகளை கடந்து செல்ல வேண்டும். ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது. இப்பாதையில் செல்லும் போது, மிகுந்த கவனம் தேவை. இளைஞர்கள், இளம் பெண்கள் விடுமுறை நாட்களில், இங்கு வந்து, நீரில் விளையாடி மகிழ்கின்றனர். இங்குள்ள பாறைகள் டைமண்ட் வடிவில் இருப்பதால், இந்த நீர்வீழ்ச்சியை 'டைமண்ட் நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கின்றனர். பல்வேறு வடிவங்கள் கொண்ட பாறைகளை காணலாம். சாகசங்கள் செய்து, நீர்வீழ்ச்சியை அடைந்தால், அங்குள்ள அழகு நடந்து வந்த வலியை, சோர்வை மறக்க செய்யும். வனப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரங்கள், செடி, கொடிகளை கடந்து நீர் பாயந்து வருவதால், நீர்வீழ்ச்சி மிகவும் துாய்மையாக உள்ளது. இதில் குளித்தால் சரும நோய்கள் குணமாகுமாம்.

எப்படி செல்வது?

சிக்கமகளூரில் இருந்து, 30 கி.மீ., தொலைவில், காமேனஹள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 242 கி.மீ., மங்களூரில் இருந்து 148 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., தொலைவில், சிக்கமகளூரு உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்ற ன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர் மைசூரு அல்லது மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் காமேனஹள்ளி நீர்வீழ்ச்சிக்கு வரலாம். இங்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. சிக்கமகளூரின் மல்லேனஹள்ளி அல்லது குமாரகிரி வழியாக வந்தால், நீர்வீழ்ச்சியை அடையலாம். கார் அல்லது பைக்கில் வந்தால், மல்லேனஹள்ளியிலோ, குமாரகிரியிலோ நிறுத்திவிட்டு, ஒன்றரை கி.மீ., துாரம் வரை நடந்துதான் செல்ல வேண்டும். மன திடம் உள்ளவர்களால் மட்டுமே, இப்பாதையில் செல்ல முடியும். நேரம் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால், காலையில் சென்று, இருள் சூழ்வதற்குள் திரும்புவது நல்லது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை