யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற கங்கமூலா மலை
- நமது நிருபர் - சிக்கமகளூரு மாவட்டம் குதிரேமுக் தேசிய பூங்காவுக்குள் கங்கமூலா மலை உள்ளது. இதனை, 'வராஹ பர்வதா மலை' என்றும் அழைக்கின்றனர். இம்மலையை யுனெஸ்கோ அமைப்பு உலகின் பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ள இம்மலை, கடல் மட்டத்தில் இருந்து 1,458 மீட்டர் உயரத்தில் உள்ளது . அதுமட்டுமின்றி மூன்று நதிகள் உற்பத்தியாகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், இம்மலையில் இருந்து தான் நேத்ராவதி, துங்கா, பத்ரா ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. இம்மலையில் மலையேற்றம் செல்லும் போது, ஓடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள், சில குகை கோவில்களை பார்க்கலாம். இங்குள்ள குகைகளில் பகவதி அம்மன், 1.8 மீட்டர் உயரத்தில் வராஹி சிற்பங்கள் காணப்படுகின்றன. மலையேற்றம் செய்வோர் இங்கு சென்று சுவாமியை தரிசிக்கலாம். கங்கமூலா மலையில் மலையேற்றம் செல்ல விரும்புவோர், முறைப்படி வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். இந்த மலைக்கு குதிரேமுக் தேசிய பூங்கா வழியாகவோ அல்லது சிருங்கேரி வழியாகவும் செல்லலாம். காலை 6:00 முதல் மாலை 6:00 மணிக்குள் மலையேற்றம் செய்யலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 160 கி.மீ., தொலைவில் உள்ள குதிரேமுக்கிற்கு பஸ், டாக்சியில் செல்லலாம். ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ள குதிரேமுக்கிற்கு பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், குதிரேமுக் பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்த குதிரேமுக் தேசிய பூங்காவுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.� கங்கமூலா மலை. � மலையேற்றத்தின் போது காணப்படும் குட்டி நீர்வீழ்ச்சிகள். � பகவதி அம்மன், வராஹ சிற்பங்கள் உள்ள குகை.