உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சைக்கிளிங் செல்வதற்கு ஏற்ற ஹென்னுார் மூங்கில் காடு

சைக்கிளிங் செல்வதற்கு ஏற்ற ஹென்னுார் மூங்கில் காடு

சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியாக இருப்பதுடன், இதய துடிப்பை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. பெங்களூரில் ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வேலைப்பளு, மன அழுத்தத்தை குறைக்க சைக்கிளிங் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.சைக்கிளில் வேலைக்கு செல்பவர்களை நாம் பார்த்து இருப்போம். ஆனால் பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சைக்கிள் ஓட்டி செல்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சைக்கிளை ஓட்டி சிக்னலை கடப்பது முடியாத காரியம். சாலையில் சைக்கிளில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு விடுமோ என்று கூட பயம் ஏற்படும். சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆசை தீர சைக்கிளை ஓட்டுவதற்கு ஏற்ற இடமாக ஒரு காடு உள்ளது. பெங்களூரு நகரின் பாகலுார் அருகே உள்ளது மிட்டகானஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஹென்னுார் மூங்கில் காடு என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். காலை 6:00 முதல் காலை 9:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், இந்த வனப்பகுதிக்குள் ஏராளமானோர் சைக்கிள் ஓட்டுகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சைக்கிளிங் மட்டுமின்றி ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடவும், இந்த மூங்கில் காடு ஏற்ற இடமாக உள்ளது. பறவைகளின் கீச்… கீச் சத்தம், வனப்பகுதியில் உள்ள மரங்களின் இலை வாசமும், நமது மனதை மயக்கி விடும். வேலை பளுவில் இருந்து விடுபட்டு குடும்பத்தினருடன் ஒரு நாள் முழுதும் பொழுதை போக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.வனப்பகுதியின் நடுவில் சிறிய கல்குவாரி உள்ளது. அங்கு உள்ள பாறைகள் மீது அமர்ந்தும், வனப்பகுதி அழகை கண்டு ரசிக்கலாம். பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பாகலுாருக்கு, '293 எஸ்' என்ற எண்ணில் பி.எம்.டி.சி., பஸ்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி