சுற்றுலா பயணியரை கவரும் காரத் கவி லேக்
பெங்களூரு நகரில் வசிப்போர் வார இறுதி நாட்களில், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று நேரத்தை செலவிட விரும்புவர். இதற்காக ஒரு நாளில் சுற்றுலா சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வகையிலான, சுற்றுலா தலங்களை அதிகம் தேர்வு செய்வர். பெங்களூரை நகரை சுற்றி 100 கி.மீ., துாரத்திற்குள் ஏராளமான நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், வனப்பகுதிகள் உள்ளன. இதில் ஒன்று காரத் கவி லேக். பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகா கனசங்கா கிராமத்தில் காரத் கவி லேக் அமைந்து உள்ளது. சுற்றுலா பயணியரை எளிதில் கவரும் இடமாக உள்ளது. இரண்டு மலைகளுக்கு நடுவில் ஏரி உள்ளது. மலைகளின் உச்சியில் நின்று பார்க்கும் போது, ஏரி பிரமிப்பாக காட்சி அளிக்கும். ஏரியின் நடுவில் நிற்கும் அரிய பறவைகளை கண்டு ரசிக்கலாம். ஏரி கரையில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மலையேற்றம் செல்வோருக்கும் இந்த இடம் ஏற்றதாக இருக்கும். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணியர் கூடாரம் அமைத்து, அதற்கு ள் தங்கி இயற்கையின் அழகை ரசிப்பதுடன், உணவு சமைத்தும் சாப்பிடுகின்றனர். ஏரியில் கயாக்கிங் என்ற படகு சவாரி நிகழ்ச்சியும் உள்ளது. ஆனால், சுற்றுலா பயணியர் அனைவராலும், கயாக்கிங் செல்ல முடியாது. ஏரியின் அருகில் ஒரு ரிசார்ட் உள்ளது. அங்கு அறை எடுத்து தங்கி இருப்பவர்கள் மட்டும், கயாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கனகபுரா டவுனில் இருந்து கனசங்காவுக்கு இடைப்பட்ட துாரத்தில் நிறைய கிராமங்கள் உள்ளன. கார்களில் செல்லும் போது, கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் கண்டு ரசிக்கலாம். காரத் கவி லேக் அமைந்துள்ள இடத்திற்கு, அரை கி.மீ., துாரத்திற்கு முன்பே சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இதனால் காரில் செல்வதற்கு சற்று சிரமம் ஏற்படும். பைக்கில் செல்வோர் நேரடியாக சென்று விடலாம். பெங்களூரு நகரில் இருந்து காரத் கவி லேக் 61 கி.மீ., துாரத்தில் உள்ளது. பஸ்சில் செல்வோர் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் கனகபுரா சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் கனசங்கா கிராமம் செல்லலாம் - நமது நிருபர் - .