உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / குந்தாபுரா உப்பினகுத்ரு தீவு

குந்தாபுரா உப்பினகுத்ரு தீவு

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் ஏராளமான தீவுகள் உள்ளன. செயின்ட் மேரீஸ், நேத்ராணி, குரும்காட் உள்ளிட்ட தீவுகளுக்கு சுற்றுலா பயணியர் அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணியர் அறியாத சிறிய தீவுகளும் நிறைய உள்ளன. இதில் ஒன்று உப்பினகுத்ரு தீவு.உடுப்பியில் உள்ள குந்தாபுரா என்றாலே அப்பகுதியில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில் மட்டும் தான் பலருக்கும் தெரிந்து இருக்கும். குந்தாபுராவில் இருந்து வெறும் 7 கி.மீ., துாரத்தில் அமைந்து இருப்பது தான் உப்பினகுத்ரு தீவு.உதயவாரா ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள இந்த தீவு சுற்றுலா பயணியர் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளது. உப்பின என்றால் உப்பு என்றும், குத்ரு என்றால் தீவு என்றும் பொருள்படுகிறது. இந்த தீவு ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்கு பயன்பட்டுள்ளது. உதயவாரா ஆற்றின் கரையில் இருந்து தீவுக்கு சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.அலைகளின் சத்தம், தீவில் உள்ள பசுமைகளை பார்த்தபடியே சுற்றுலா பயணியர் நேரத்தை போக்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. தீவின் கரையோரம் ஆழம் குறைவாக இருப்பதால் டைவ் அடித்து குளித்து மகிழலாம். தீவு பகுதியில் சிறிய விநாயகர் கோவில் உள்ளது.படகு சவாரி, ஜெட் ஸ்கீயிங், பாராசெயிலிங் போன்ற நீர்விளையாட்டுகளும் இங்கு உள்ளன. தீவில் இருந்து சிறிது துாரத்தில் சதுப்பு நில காடுகள் உள்ளன. இங்கு சென்று பல்வேறு தாவரங்கள், விலங்கினங்களை காணவும் வாய்ப்பு உண்டு. தீவில் இருந்து சதுப்பு நில காட்டிற்கும் படகில் தான் செல்ல வேண்டும்.மிகவும் அமைதியான இடத்தை தேடுபவர்களுக்கு, உப்பினகுத்ரு தீவு நிச்சயம் ஒரு வரமாக அமையும். பெங்களூரில் இருந்து குந்தாபுரா 407 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து குந்தாபுராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலிலும் குந்தாபுராவை அடையலாம். விமானத்தில் சென்றால் மங்களூரு சென்று, அங்கிருந்து குந்தாபுரா செல்ல வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை