உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மதுகிரி கோட்டை! சுற்றுலா பயணியரை ஈர்க்கும்

மதுகிரி கோட்டை! சுற்றுலா பயணியரை ஈர்க்கும்

'துமகூரு' கர்நாடகாவின் அழகான மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் ஏராளம். புராதன கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. மதுகிரி கோட்டையும் சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கிறது.துமகூரு மாவட்டத்தில் உள்ள, முக்கியமான சுற்றுலா தலங்களில், மதுகிரி மலையும் ஒன்றாகும். இது ஆசியா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய ஒற்றைக்கல் மலையாகும். மலையேற்றத்துக்கு தகுதியான இடமாகும். அதிகமான தேன் கிடைத்ததால், இந்த மலைக்கு மதுகிரி என, பெயர் ஏற்பட்டதாம். தேனுக்கு மது என்ற பெயரும் உள்ளது. துமகூருக்கு வரும் போது, மதுகிரி மலையை பார்க்க மறக்காதீர்கள்.கிட்டத்தட்ட, 3,930 அடி உயரத்தில் அமைந்துள்ள மதுகிரியை, மத்தாகிரி என்றும் அழைக்கின்றனர். செங்குத்தான சரிவில் கோட்டை கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டைக்குள் சிதிலமடைந்துள்ள கோபால கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. தண்டு மாரம்மா கோவிலும் இங்குள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா, துமகூரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மதுகிரியில் வெங்கட ரமணா, மல்கேஸ்வரா கோவில்களும் உள்ளன. இவை, விஜயநகர ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை. கோட்டை வளாகத்தில் ஜெயின் கோவிலும் உள்ளது. 17ம் நுாற்றாண்டில், 1670ல் கங்கர் வம்சத்தை சேர்ந்த ராஜா ஹைரா கவுடா, கோட்டையை கட்டினார்.முதலில் மண் கோட்டையாக இருந்தது. அதன்பின் ஹைதர் அலி, கல் கோட்டையாக கட்டினார். கண்காணிப்பு கோபுரம் அமைத்தார். அந்த காலத்திலும் மழை நீரை சேகரிப்பதில், மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதற்காக இரண்டு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் பக்கத்தில் கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. சாகச பிரியர்களுக்கு தகுதியானது மதுகிரி மலை. மலையேற்றத்தின் பாதி தொலைவுக்கு படிகள் உள்ளன. அதன்பின் திறந்த வெளி மற்றும் செங்குத்தான பாறைகளின் மீது ஏறி செல்ல வேண்டும். மலை மீது ஏற வசதியாக, இரும்பு கைப்பிடிகள் அமைத்துள்ளனர். சில இடங்களில் கைப்பிடிகள் இல்லை. ஆனால் பாறைகளை குடைந்து படிகள் அமைத்துள்ளனர். பிடிமானம் இல்லாமல், செங்குத்தான படிகளில் ஏறியபடி கீழே பார்த்தால், உடல் நடுங்கும். மலையேற்றம் செல்வோர், அதிகாலையே புறப்படுவது நல்லது. தாமதமானால், வெயில் அதிகம் இருக்கும். மேலே ஏறி செல்ல செல்ல காற்று பலமாக வீசும். நல்ல பிடிமானம் உள்ள ஷூக்கள் அணிவது அவசியம். இல்லையென்றால் வழுக்கும் அபாயம் உள்ளது. தேவையான குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.மலை உச்சியில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமையான காட்சிகளை காணலாம். கோட்டையை சுற்றி பார்க்கலாம். இயற்கையை ரசிக்கலாம். மறக்க முடியாத அனுபவம் கிடைக்க வேண்டுமானால், மதுகிரி மலை பெஸ்ட் சாய்ஸ்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 107 கி.மீ.,யும், துமகூரில் இருந்து 43 கி.மீ.,யும், மைசூரில் இருந்து 234 கி.மீ., தொலைவிலும் மதுகிரி மலை உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. பெங்களூரில் இருந்து துமகூருக்கு மெஜஸ்டிக்கில் இருந்து, அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் செல்கிறது. நேரம்: மலையேற்றத்துக்கு குறிப்பிட்ட நேரம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் மதுகிரி மலையில் உள்ள மல்லேஸ்வரா, வெங்கட ரமண சுவாமி கோவிலை தரிசிக்க காலை 6:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மட்டுமே அனுமதி உள்ளது.தொடர்பு எண்: 96111 02222அருகில் உள்ள சுற்றுலா தலம்: சென்னராயண துர்கா, சித்தகங்கா மடம், சித்தாரா மலை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை