மாண்டியா கொக்கரேபெல்லுார் பறவைகள் சரணாலயம்
பறவைகளால் தங்களுக்கு நல்லது நடப்பதாகவும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் மத்துாரின் பெல்லுார் கிராம மக்கள் நம்புகின்றனர். கரும்புக் கு பெயர் பெற்ற மாண்டியா மாவட்டம், மத்துாரில் இருந்து, 12 கி.மீ., தொலை வில் அமைந்து உள்ளது கொக்கரேபெல்லுார் பறவைகள் சரணாலயம். காவிரியும், சிம்சா நதியும் சங்கமிக்கும் இடத்தில், இக்கி மரம், புளிய மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தான், பல பறவைகள் கூடு கட்டுகின்றன. குறிப்பாக ஐபிஸ் லுகாசெபாலஸ் எனும் வண்ண நாரை, பெலிகன் பறவைகளும் அதிகளவில் வருகை தருகின்றன. வண்ண நாரை பறவைகள், நவம்பர் தோறும் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவை வளர்ந்ததும், ஜூலை, ஆகஸ்டில் குட்டிகளுடன் பறந்து சென்று விடுகின்றன. அதுபோன்று, பெலிகன் பறவையும் ஜனவரியில் இங்கு வந்து முடடையிட்டு, குஞ்சு பொறித்து, அவை வளர்ந்ததும் ஆகஸ்டில் குட்டிகளுடன் பறந்து சென்றுவிடுகின்றன. இக்கிராம மக்கள், பறவைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதால், ஆறு மாதங்கள் அவை இல்லாத நேரத்தில், தங்கள் வீடுகளில் பறவைகளை ஓவியமாக வரைந்து வைத்து கொள்கின்றனர். இவ்விரு பறவைகள் தவிர, லிட்டில் கார்மோரண்ட், பிளாக் ஐபிஸ், கிரே ஹெரான், இந்திய குளம் ஹெரான், ரிங் -நெக்ட் கிளிகள் என 200க்கும் மேற்பட்ட இன பறவைகள் வருகின்றன. ஆறு மாதங்கள் இப்பறவைகள் இங்கு வசிப்பதால், விவசாயிகள் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், அதற்கான இழப்பீடு தொகையை, வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும் பல ஆண்டுகளாக மின்சார ஒயர்களில் பறவைகள் அமரும்போது, மின்சாரம் பாய்ந்து இறந்து வந்தன. இதை தடுக்கும் வகையில் கிராமத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் மின்சார ஒயர்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், அதில் அமரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதுபோன்று, பறவைகள் முட்டையிட்டு பொறித்த குஞ்சுகள், மரத்தில் இருந்து கீழே விழுந்தால், அதனை, கிராமத்தினர் மீட்டு, காயத்திற்கு சிகிச்சை அளித்து, வளர்க்கின்றனர். காயம் ஆறியபின், அவைகளை மீண்டும் பறக்க விட்டுவிடுகின்றனர். கொக்கரேபெல்லுா ர் ஒரு பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் அல்ல. கர்நாடக வனத்துறை, சிறிய நீர்ப்பாசன துறை, மீன்வளத்துறை, கர்நாடக மாநில சுற்றுலா துணை இணைந்து, உள்ளூர் அளவில் கிராம குழு, தொண்டு நிறுவனங்களை, பறவைகளுக்கு வசதிகளையும், பாதுகாப்பையும் மேம்படுத்த உதவி வருகின்றன. பறவைகள் ஆர்வலர்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இட மாகும். பறவைகளுடன் கிராமத்தினர் பழகும் இணக்கமான உறவு மகிழ்ச்சியை அளிக்கும். அழிந்து வரும் இனமான ஸ்பாட் பில்ட் பெலிகன்களை இங்கு பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு வரும் பறவைகள் மரங்கள் மட்டுமின்றி, கிராமத்தினர் வீடுகளின் மாடியிலும் கூடு கட்டும். அவ்வாறு கூடு கட்டினால், கிராமத்தின் மேலே செல்லாமல், கீழேயே இருப்பர். நுழைவு கட்டணம் இல்லை; சுற்றிப்பார்க்க நேரமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இங்கு சென்று பார்வையிடலாம். நவம்பரில் இருந்து ஆகஸ்ட் வரை காலகட்டத்தில் பறவைகளை பார்க்க தகுந்த காலமா கும். - நமது நிருபர் -