சுற்றுலா பயணியரை கவரும் மஞ்சினபெலே அணை
பூங்கா நகர், ஏரிகள் நகர் என்ற பிரசித்தி பெற்ற பெங்களூரில், அணைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் இல்லையே என்ற ஏக்கம் மக்களுக்கு உண்டு. ஆனால் பெங்களூருக்கு வெகு அருகில், அற்புதமான சுற்றுலா தலங்கள், 'வா வா' என, கைகூப்பி அழைக்கின்றன. கோடை விடுமுறையை கொண்டாட, தகுதியான இடமாகும்.பெங்களூருக்கு அருகில், சுற்றுலா பயணியர் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில், மஞ்சினபெலே அணையும் ஒன்று. ஒரு நாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த இடம் பெஸ்ட் சாய்ஸ்.பெங்களூரில் இருந்து வெறும் 36 கி.மீ., தொலைவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை சென்றால், மாலை திரும்பி விடும் தொலைவில் உள்ளது.ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகாவில், மஞ்சினபெலே அணை உள்ளது. அர்க்காவதி அணைக்கு குறுக்கே, இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இது மாகடி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் மட்டுமின்றி, விவசாயத்துக்கு தண்ணீர் வழங்குகிறது.மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அணை அருகில் நின்று சுற்றிலும் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை நிற பட்டுச்சேலையை விரித்துபோட்டது போன்று, பசுமையான காட்சிகள் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும்.வாகனங்களின் ஹாரன் சத்தத்தை கேட்டு, கேட்டு மரத்துப் போன காதுகளுக்கு, மஞ்சினபெலே அணை பகுதியில் உள்ள நிசப்தமான சூழ்நிலை, புதிய அனுபவத்தை அளிக்கும். யாருடைய தொந்தரவும் இல்லாமல், அமைதியாக அமர்ந்து, இயற்கையை ரசிக்க தினமும் வெளி மாவட்டம், நாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். அணை துாய்மையாக உள்ளது. துாரத்தில் இருந்து பார்த்தால் தெளிவான நீரை காணலாம்.அணையை சுற்றிலும் பசுமையான மரங்கள், மலைகள் உள்ளன. இந்த அற்புதமான காட்சியை விட்டு கண்கள் அகலாது. பார்த்து கொண்டே இருக்கலாம் என, தோன்றும். மனதை சுண்டி இழுக்கும்.இந்த இடத்தில் சூர்யோதயம், சூர்ய அஸ்தமனம் மிக அழகான காட்சியாக இருக்கும். இதை ரசிக்கவே சுற்றுலா பயணியர் குவிகின்றனர். டிரெக்கிங் செய்ய இளைஞர்கள், இளம் பெண்கள் வருகின்றனர்.சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நீரில் சாகச விளையாட்டு, படகு சவாரி என, பல்வேறு பொழுது போக்கு விளையாட்டுகள் இங்குள்ளன. மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இயற்கையை ரசித்து, படகு சவாரி செய்து, நீரில் விளையாடி மனதில், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டு செல்கின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 36 கி.மீ., மைசூரில் இருந்து 123 கி.மீ., மாண்டியாவில் இருந்து 78 கி.மீ., துாரத்தில் மஞ்சினபெலே அணை உள்ளது. கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், மாகடிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ரயில் வசதியும் உள்ளது. மாகடியில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனத்தில் செல்லலாம். சொந்த வாகனம் என்றால் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் அணைக்கு சென்றுவிடலாம்.
முதல், மாலை 6:00 மணி வரை.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: ரங்கநாதசுவாமி கோவில், கெம்பே கவுடா கோட்டை, கெம்பே கவுடா நந்தி மண்டபம், ராமதேவர பெட்டா மலை, சாவனதுர்கா மலை. - நமது நிருபர் -