வயநாட்டில் வசீகரிக்கும் பனசுரா மலை
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள வயநாடு, சுற்றுலா தலங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டம். கர்நாடகா - கேரள எல்லையில் வயநாடு அமைந்துள்ளதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்களில் வயநாட்டிற்கு அதிகமாக சுற்றுலா செல்கின்றனர்.குறிப்பாக பெங்களூரு, மைசூரு, மாண்டியா பகுதிகளை சேர்ந்தவர்கள் வயநாட்டிற்கு அதிகமாக செல்கின்றனர். வயநாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பனசுரா மலை உள்ளது.இந்த மலை, அடிவாரத்தில் இருந்து 2,073 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்றம் விரும்புவோர்களுக்கு இந்த மலை, ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.மலை அடிவாரத்தில் டிக்கெட் கவுன்டர் உள்ளது. காலை 6:00 முதல் காலை 10:00 மணி வரை கவுன்டர் திறந்திருக்கும்.அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ஏறுவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். மலை உச்சிக்கு சென்ற பின் அங்கிருந்து கீழே பார்க்கும்போது பச்சை பசேல் நிறைந்த மலைகள், பனசுரா அணையின் அழகை கண்டு ரசிக்கலாம்.மலைக்கு செல்லும் வழியில் ஏராளமான அரிய வகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை பார்க்கலாம். வாய்ப்பு இருந்தால் காட்டு யானைகளை பார்க்கும் வாய்ப்பும் உண்டு.மலை அடிவாரத்தில் நான்கு பழங்குடியினர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த மலை பதிஞ்சர தாரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து பதிஞ்சரதாரா 310 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, கேரள அரசு பஸ்கள் வயநாடு, சுல்தான் பத்தேரி, கண்ணூர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.பஸ்சில் இரவில் பயணம் செய்தால் பண்டிபூர் வனப்பகுதி வழியாக பஸ் செல்லும். வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.வயநாட்டில் நிறைய சுற்றுலா தலங்கள் இருப்பதால், இரண்டு நாட்கள் தங்கி இருந்து கூட பார்த்து வரலாம். ரெசார்ட் வசதி உள்ளது. நிறைய சாகச விளையாட்டுகளும் உள்ளன.