உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  தாவணகெரேவின் பதிகுட்டா மலை

 தாவணகெரேவின் பதிகுட்டா மலை

- நமது நிருபர் - கர்நாடகாவின் மையப்பகுதியில் உள்ள தாவணகெரே ருசியான வெண்ணெய் தோசைக்கு மட்டுமின்றி, இயற்கையுடன் காணப்படும் சுற்றுலா தலங்களுக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் பதிகுட்டா மலையும் ஒன்றாகும். தாவணகெரே நகரத்திலிருந்து, 10 கி.மீ., தொலைவில் அழகான பதிகுட்டா மலை இருக்கிறது. அமைதியான சூழல், பசுமையான காட்சிகளுக்கு பெயர் பெற்றது. வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சென்று, பொழுதுபோக்க ஏற்ற இடமாக இருக்கும். இந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ள பதி ஏரி மிகவும் அழகானது. இந்த ஏரியை மணிக்கணக்கில் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். ஏரிக்கரையில் நடந்து கொண்டே, அங்குள்ள சிற்றுண்டிகளை சாப்பிட்டு மகிழலாம். இதையடுத்து, மலையேற வேண்டியது தான். புதிதாக மலையேறுபவர்களுக்கு ஏற்ற இடம்; மிகுந்த சிரமம் இருக்காது. இங்கு அதிகளவில் கடைகள் கிடையாது. எனவே, தண்ணீர், தேவையான உணவு பொருட்களை கையோடு எடுத்து வருவது அவசியமாகும். அதுபோல, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, இங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ ரேவணசித்தேஸ்வரா கோவில் உள்ளது. இது, சிவபெருமானுக்காக வடிவமைக்கப்பட்ட கோவிலாகும். உள்ளூர் மக்கள், சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர் . மலை உச்சியிலிருந்து ஒட்டுமொத்த தாவணகெரே நகரத்தையும் பார்த்து ரசிக்க முடியும். இது, ஒரு சிறந்த 'வியூ பாயின்ட்'டாக இருக்கும். சூரிய அஸ்தமனத்தின் போது வானம் ஆரஞ்ச், சிவப்பு நிறமாக மாறுவதை பார்த்து ரசிக்கலாம் . இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை செல்வது சிறந்தது. கோடைக்காலத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

எப்படி செல்வது?

பெங்களூரிலிருந்து தாவணகெரே 280 கி.மீ., தொலைவில் உள்ளது. தாவணகெரேவிலிருந்து பதிகுட்டா மலை 10 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம் தாவணகெரேவை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் மலையை அடையலாம். ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திலிருந்து, 26752 என்ற எண் ரயிலில் பயணிப்பதன் மூலம் தாணகெரேவை எளிதில் அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் மலையை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !