உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சுற்றுலா அறிவிப்பு கட்டுரை

சுற்றுலா அறிவிப்பு கட்டுரை

மேற்கு தொடர்ச்சி மலை தொடர், அடர்த்தியான காடுகள் சூழ்ந்த மலையில் ஆகும்பே அமைந்துள்ளது. இங்கு அதிக மழை பெய்வதால், 'தென்னக சிரபுஞ்சி' என, அழைக்கப்படுகிறது. சிரபுஞ்சிக்கு பின், இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்களில், ஆகும்பேவும் ஒன்றாகும். கர்நாடகாவுக்கு இறைவன் கொடுத்த வரம். இங்கு இயற்கை அழகு ஏராளம். மழைக்காலத்தில் பச்சை நிற பட்டுச் சேலைகளை விரித்து போட்டது போன்று, பசுமையான காட்சிகளை காணலாம்.ஆகும்பே காட்டுப் பகுதியில், கார்சினியா, லிஸ்டேசியா, யுஜினியா உட்பட பல்வேறு அபூர்வமான மரங்கள் உள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடிகளும் இங்குள்ளன. அதிக மழை பெய்வதால் ஆண்டு முழுதும், பசுமை மாறாமல் காண்போரை மயக்குகிறது. ஷிவமொக்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் ஜோக் நீர் வீழ்ச்சி, கொடசாத்ரி போன்ற சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். அதே போன்று ஆகும்பேவுக்கு வர மறப்பது இல்லை.இந்தியாவின் மிகப்பெரிய காடுகளில், இதுவும் ஒன்றாகும். ஆகும்பே மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகமான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. குஞ்சிகல், பார்கானா, அப்பி, குட்லு, தீர்த்தா என, பல்வேறு நீர் வீழ்ச்சிகளை காணலாம். இதே காரணத்தால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். மலையேற்றத்துக்கும் பலர் வருகின்றனர்.ஆகும்பேவில் வானிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் மையம் உள்ளது. இது இந்தியாவின் முதல் வானிலை ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகும்பேவுக்கு அனைத்து பருவ காலங்களிலும் வரலாம் என்றாலும், மழைக்காலத்தில் வந்தால் இனிமையான அனுபவத்தை உணரலாம்.சுற்றிலும் கண்களுக்கு இதமளிக்கும் பசுமையான காட்சியை ரசித்தபடி, உடலை வருடி செல்லும் குளிர் காற்றை அனுபவித்தபடி, பறவைகளின் ரீங்காரத்தை கேட்டுக் கொண்டு, அடர்த்தியான வனப்பகுதியில் நடந்து செல்வது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும். சொர்க்கத்தில் நுழைந்துள்ளோமா என்ற உணர்வு தோன்றும். ஆகும்பே அருகில் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளன. குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்து, சில நாட்கள் தங்கி இயற்கையோடு ஒன்றி பொழுது போக்கலாம். இங்குள்ள ஹோட்டல்களில் வென்னிலா பிளேவர் கொண்ட டீ மிகவும் பிரபலம். இங்கு செல்லும் போது இதை அருந்த மறக்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை