UPDATED : அக் 06, 2023 02:19 PM | ADDED : அக் 06, 2023 12:55 PM
லியோ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியது. வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற இந்த டிரெய்லர் தற்போது பல புதிய சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது. கத்தி, சுத்தியல், ரத்தம், ஆபாச வசனம் என லோகேஷ் கனகராஜ் படத்தில் வரும் அத்தனை அம்சங்களும் கொண்ட இந்த டிரெய்லரில் விஜய் எதிரிகளை வழக்கம்போல அடித்து பந்தாடுகிறார்.பிரபல நடிகர்களை ஆபாச வார்த்தைகள் பேச வைப்பதை தமிழ் சினிமா காலாகாலமாகச் செய்து வருகிறது. சில இடங்களில் வசனகர்த்தாக்கள் சிலர் இதுபோன்ற வார்த்தைகளை திரைப்பட வசனங்களாக எழுதுகின்றனர். முதல்வன், இருமுகன், ஆதித்யா வர்மா, மங்காத்தா, என்னை அறிந்தால், சமீபத்தில் வெளியான லவ் டுடே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகர்கள் ஆபாச வார்த்தைகளைப் பேசுவதும், அதற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் வரவேற்பு அளித்து கை தட்டி விசில் அடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதே வரிசையில் தற்போது விஜய் லியோ டிரெய்லரில் ஆபாச வார்த்தை ஒன்றை உச்சரிக்கிறார்.
இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் இடைவேளைக்கு முன்னர் வில்லன் விஜய் சேதுபதியை, ஹீரோ விஜய் ஆபாச வார்த்தையில் திட்டுவார். இது சென்ஸார் செய்யப்படாமல் வெளியிடப்பட்டு இருக்கும். இதேபோல தற்போது லியோ படத்திலும் விஜய் பேசிய வார்த்தை விவாதப்பொருளாகி உள்ளது. அரசியல் கட்சியினர் பலர் இதுகுறித்த விமர்சனத்தை தற்போது முன்வைத்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரத் திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் பேசும் விஜய் அரசியலுக்கு வந்தால் பெண்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்காது என விமர்சிக்கப்படுகிறது. அதே சமயம் விஜய்க்கு ஆதரவாகவும் பல சமூக வலைதளப் பதிவுகளைக் காணமுடிகிறது.
ஒரு கதைக்களத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஆபாச வார்த்தைகள் படக்குழுவால் திரைப்படங்களில் சேர்க்கப்படுகின்றன. இதற்கு நடிகர்கள் பொறுப்பாக முடியாது என வாதிடப்படுகிறது. எது எப்படியோ..! இந்த விவாதமே லியோ படத்துக்கு இலவச விளம்பரமாகி உள்ளதையும் மறுப்பதற்கில்லை.