உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / இயற்கையின் அதிசயம்... ஏரியில் மிதக்கும் கிராமம்!

இயற்கையின் அதிசயம்... ஏரியில் மிதக்கும் கிராமம்!

இமயமலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் என அழகிய நிலப்பரப்பை கொண்டுள்ள மாநிலம் மணிப்பூர். இங்குள்ள ஏரிகளில் மிகவும் புகழ் பெற்றது லோக்டக் ஏரி. அப்படி இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...நீர் நிலைகளுக்கு மத்தியில் புல்வெளிகள் சூழ்ந்த நிலப்பரப்பை கொண்டிருப்பது தான் இதன் சிறப்பம்சம். அந்த சிறு நிலப்பரப்புக்குள் சின்னஞ்சிறு வீடுகள் அமைத்து மக்கள் வசிப்பது மற்றொரு ஆச்சரியம். திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் படகின் துணையோடுதான் பயணிக்க முடியும். அருகிலுள்ள வீட்டுக்கு செல்லவேண்டும் என்றால் கூட, படகுகளில் தான் செல்ல முடியும்.

ஆங்காங்கே வீடுகளுடன் காட்சியளிக்கும் இந்த சின்ன தீவு கிராமத்துக்கு பெயர் சம்பு காங்க்போக். இங்கு சுமார் 130 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் 400 பேர் வசிக்கிறார்கள். இதுதான் இந்தியாவில் இருக்கும் ஒரே இயற்கையான மிதக்கும் கிராமம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும் லோக்டக் ஏரி விளங்குகிறது. மணிப்பூரின் பொருளாதாரத்திலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அளவுக்கு பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 287 சதுர கி. மீ.,. மழைக்காலத்தில் இதன் பரப்பளவு 500 சதுர கி. மீ., தூரம் வரை நீளும். லோக்டக் ஏரியின் மேற்பரப்பில் வட்ட வடிவில் மிதக்கும் புல்வெளி போன்ற பகுதி பரப்பு சதுப்பு நிலம். முன்னொரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த இந்தப் பகுதி பல்வேறு காலகட்டங்களில் சிதைவுற்று வட்ட வடிவ பின்னணிக்கு மாறிவிட்டது. இதனை உள்ளூர் மொழியில் பும்டிஸ் என்று அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த ஏரியில் பல்வேறு வகையான நீர் வாழ் தாவரங்கள் உள்ளன. அரிய வகை தாவரங்களும் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான பறவைகள், பாம்புகள், அரிய வகை மான் உள்பட 400 வகையான விலங்கினங்களின் புகலிடமாகவும் லோக்டக் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அழகை பார்வையிடவும், படகு சவாரி மேற்கொள்ளவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி