சாமானிய மக்களுக்கும் அரசு சேவை முறையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவு செயல்படுகிறது. ஒருவருக்கு அரசின் சேவை சரிவர கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அப்போதும் தீர்வு கிடைக்காவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கலாம். அப்போதும் தீர்வு கிடைக்காவிட்டால் இணையதளம் மூலமாக நேரிடையாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்று புகார் அளிக்க முடியும். கோரிக்கை தகுதியுடையதாக இருந்தால், அது தொடர்பான துறை மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு http://cmcell.tn.gov.in/, http://cmcell.tn.gov.in/login.php அல்லது cmhelpline.tnega.org என்ற இணைய முகவரிக்குள் சென்றால், 'முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு, இணைய வழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு முறைமை' என்ற முகப்பு பக்கம் திரையில் தோன்றும். ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் மொழி ஆப்சனை தேர்வு செய்ய முடியும்.தொடர்ந்து கோரிக்கை பதிவு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், மேலே நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 'புதிய பயனாளர் பதிவு' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, இணையதளத்துக்குள் நுழைய தனியாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். முதல் முறை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.அதில், உங்கள் பெயர், வீட்டு முகவரி, போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, உங்களுக்கான 'ஐடி' யை உருவாக்க வேண்டும்.பின்னர், உங்கள் மொபைல் நம்பர், OTP மூலமாக உள்ளே நுழையவும். அதில், கோரிக்கை வகை என்ற ஆப்சனை கிளிக் செய்தால், ஒரு பட்டியல் தோன்றும். அதில் உங்கள் கோரிக்கை தொடர்பான துறையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு முகவரி, தாலுகா, மாற்று தொலைபேசி எண், வருவாய் கிராமம், குறையின் வகை, குறை தொடர்பான துறை போன்ற காலங்களை தேர்வு செய்ய வேண்டும்.தொடர்ந்து குறைகள் குறித்த கோரிக்கை என்ற பகுதியில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் புகார் குறித்து தெரிவிக்க வேண்டும். பின்னர் சப்மிட் என்ற ஆப்சனை கிளிக் செய்தால், உங்கள் புகார் சம்ர்பிக்கப்படும். அந்த புகார் சேமிக்கப்பட்டு, அதற்கான கோரிக்கை எண் குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.'track grievance' என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்கள் புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய அந்தந்த அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.உங்களால் இணையதளம் மூலமாக புகார் பதிவு செய்ய முடியாவிட்டாலும் கவலையில்லை. 044-2567 1764 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். 044-2567 6929 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் மூலமாகவோ அல்லது tn.gov.inஎன்ற இ-மெயில் மூலமாகவோ கூட உங்கள் புகாரை அனுப்பலாம். அப்போதும் முதலமைச்சர் தனிப்பிரிவில் நீங்கள் அளித்த புகார், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பித் தீர்வு காணப்படும்.