கோவில் ஒன்று அனுமன் ஒன்பது | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தமிழகத்தில் ஒன்பது அனுமன் சிற்பங்களை ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில், திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையில் இருக்கிறது. ஒன்பது பலன்களை தரும் இவர்களைத் தரிசிப்பது விசேஷமானது. ஆஞ்சநேயர் சஞ்சீவிமலையை எடுத்து தெற்கே செல்லும் போது விழுந்த துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்றுள்ளதாக பல தல புராணங்கள் சொல்கின்றன. திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையிலுள்ள சிறுமலையும் இதன் துகளாகக் கருதப்படுகிறது. இந்த மலை அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலைச் சுற்றி, ஒரு நீரோடை மாலை போல் ஓடுகிறது. ஜெயவரத ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியக்கதிர் தினமும் காலை 7.00 முதல் 7.20 மணிக்குள் படர்கிறது. ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகை நல்ல குணங்கள் உண்டு. அந்த குணங்களின் அடிப்படையில் இங்கு நவ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.