உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழக அரசு உத்தரவால் விவசாயிகள் அதிர்ச்சி | 1% tax on maize | farmers protest

தமிழக அரசு உத்தரவால் விவசாயிகள் அதிர்ச்சி | 1% tax on maize | farmers protest

தமிழகத்தில் தற்போது மக்காச்சோளத்திற்கு 1 சதவீத செஸ் வரி வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்த வரியை வியாபாரிகள், விவசாயிகளிடமே வசூல் செய்வதால், பொருளாதார இழப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செஸ் வரியை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. தற்போது, விவசாயப் பணிக்கு, போதியளவிற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில்கூட, மக்காச்சோளம் விளைச்சல் ஆகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை என்ற சூழலில், தற்போது 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆகிறது; மீதமுள்ள 20 லட்சம் டன் ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. மக்காச்சோளத்தில் 60 சதவீதம், கால்நடைகள், கோழி தீவனங்களுக்கும், மதிப்பூட்டப்பட்ட உணவு வகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது எத்தனால் உற்பத்திக்கும், மதுபான உற்பத்திக்கும், கரும்பு சக்கைக்கு மாற்றாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பது, இன்றைய சூழலில் அவசியமானதாக உள்ளது. தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள், நார் பொருட்கள், கிழங்குகள் உட்பட பல்வேறு விளைபொருட்களுக்கு, 1 சதவீத செஸ் வரி உள்ளது போல, மக்காச்சோளத்திற்கும், 1 சதவீத செஸ் வரி வசூலிக்க வேளாண்மை உற்பத்தி பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வரிக்குரிய பணத்தை, விவசாயிகளின் கொள்முதல் பணத்தில், குறைத்துக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, மக்காச்சோள விவசாயிகள் ராஜேஷ்குமார், வெங்கடேஷ் கூறியதாவது: தற்போது விவசாயம் செய்தால் நஷ்டம்தான் என்ற சூழலில், பொருளாதார இழப்பையும் தாங்கிக்கொண்டு, தமிழக விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். தேவை அதிகம் இருப்பதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளத்திற்கும் 1 சதவீத செஸ் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், வியாபாரிகள் அந்த பணத்தை, எங்களிடமே பிடித்துக் கொள்கின்றனர். இதனால் நாங்கள் மேலும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி வருகிறோம். எனவே, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள, 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை