தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் | Heavy Rain | TN
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மாவட்ட பகுதிகள், குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்கிறது. இது கேரள பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் காணப்படும் வளிமண்டல சுழற்சியுடன் இணைந்து காணப்படும். அடுத்து வரும் நாட்களில் இது வடக்கு கேரளா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும். அதே போல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.