496 சவரன் நகைகள் மீட்ட கேரள போலீஸ் | ₹17 crore gold fraud | bank manager arrested | Mettupalayam
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் வயது 34. இவர் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிக் கிளையில் மேலாளராக இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஜெயக்குமார் கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளம் பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே கோழிக்கோடு கிளை வங்கிக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த கிளையில் அடகு நகைகளை மறு மதிப்பீடு செய்தார். அப்போது கடந்த ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை அடகு வைத்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மேலாளர் இர்ஷாத் வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜெயக்குமார் தலைமறைவானார். இந்நிலையில் தெலுங்கானாவில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் அம்பலமானது. திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமாரின் நண்பர் தனியார் வங்கி மேலாளர் கார்த்தி உதவியுடன் கையாடல் செய்தது விசாரணையில் உறுதியானது. கேரளாவில் அடகு வைத்த நகைகளை கார்த்தி உதவியுடன் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் 496 கிராம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயக்குமாரை திருப்பூர் அழைத்து வந்த கேரள போலீசார் தனியார் வங்கியில் அடகு வைத்த 496 பவுன் நகையை மீடட்னர். தொடர்ந்து திருப்பூர் வங்கி மேலாளர் கார்த்திக்கிடம் விசாரணை நடக்கிறது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் வங்கி மேலாளர்கள் ஜெயக்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் போலி நபர்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.