21 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி | Cricket Match
கோவை கிருஷ்ணா கல்லுாரி சார்பில் நடக்கும் கோவை டைஸ் விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. இதில், 21 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மைதானத்தில் நடந்த இரண்டாம் சுற்றுப்போட்டியில் பி.ஏ., இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பி.ஏ., கல்லுாரி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது. அணிக்காக பவித்ரன் 56 ரன்கள் எடுத்து விளாசினார். சிவ குரு ஈஸ்வர் 32 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு 129 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய கே.ஜி., கல்லுாரி அணி 19.5 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து 129 எடுத்து வெற்றி பெற்றது. அணிக்காக சம்ரித் 30 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடினார். பி.ஏ., கல்லுாரியின் சிவ குரு ஈஸ்வர் மூன்று விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கே.ஜி., கல்லுாரி அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியது.