நெல்லியாளம் நகராட்சி மீது அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு | Garbage Froude | Nelliyalam Municipality
நெல்லியாளம் நகராட்சி மீது அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு | Garbage Froude | Nelliyalam Municipality | Nilgiris நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் முனியப்பன் வரவேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஜாபீர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டார். கூட்டத் துவக்கத்தில் நகராட்சியின் 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் கான்ட்ராக்ட் முடிவுக்கு வரவுள்ளது. புது கான்ட்ராக்ட் மேற்கொள்ள ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு கவுன்சிலர் ஜாபீர் எதிர்ப்பு தெரிவித்தார். அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கான்ட்ராக்டர் குப்பைகளை குறைவாக சேகரித்து, அதிக எடை காண்பித்து முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினார். குப்பை சேகரிக்கும் கான்ட்ராக்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி நகராட்சி தலைவர் இருக்கை முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் திமுக கவுன்சிலர் சேகர் தலைமையில், அனைத்து கவுன்சிலர்களும் கான்ட்ராக்ட் புதுப்பிக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். குடிநீர் உதவியாளர்கள் 4 பேரை தற்காலிக பணியில் அமர்த்தி தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீக்க தடுப்பணைகளை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றும் பணி முறையாக நடக்கிறதா என்பதை துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனரிடம், தலைவர் சிவகாமி வலியுறுத்தினார். தலைவர் மற்றும் துணை தலைவர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை குறித்து தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் புவனேஸ்வரன் வலியுறுத்தினார். அது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் முழுமையான தகவல் தெரிவிக்க இயலாது என கமிஷனர் தெரிவித்தார். தெருவிளக்கு சீரமைப்பு பணி, குடிநீர் கிணறு அமைத்தல், நடைபாதை சீரமைத்தல், சாலை மற்றும் சாலையோர சீரமைப்பு பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். துணை தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.